திருவனந்தபுரம்: கேரளாவில் சமீப காலமாக பள்ளிக் கல்வித்தரம் குறைந்து வருவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் கேரளாவில் பள்ளிக் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் முறை இருந்தது. இது தொடர்பாக அரசு அதிகாரபூர்வமாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. எழுத்துத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் மாணவர்களின் ஒழுக்கம், கலை உள்பட மற்ற திறன்களை மதிப்பீடு செய்து அவர்களுக்கு தேர்ச்சி அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு முதல் 8ம் வகுப்பில் ஆல் பாஸ் முறையை ரத்து செய்ய கேரள அமைச்சரவை நேற்று முடிவு செய்தது. இனி குறைந்தபட்ச மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே 8ம் வகுப்பில் தேர்ச்சி பெற முடியும்.