திருவனந்தபுரம்: கேரளாவில் தனது வீட்டில் திருடிய இளைஞருக்கு பள்ளி ஆசிரியர் ஒருவர் அன்பாக அறிவுரை கூறிய வீடியோ பரவி வருகிறது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள திருத்தலா என்ற பகுதியை சேர்ந்தவர் முத்துலட்சுமி. பள்ளி ஆசிரியரான இவர் 2 மகள்களோடு வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இவரது வீட்டில் ஒருவர் புகுந்து பணத்தை திருடி இருக்கிறார். இது குறித்து விசாரித்த போலீசார் கண்ணூர் பகுதியை சேர்ந்த இஸ்மாயில் என்ற இளைஞரை கைது செய்தனர். சம்பவ நடைபெற்ற இடத்திற்கு போலீசார் அவரை அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது அந்த இளைஞருக்கு ஆசிரியர் முத்துலட்சுமி அறிவுரை கூறினார். எல்கேஜி மாணவர்களுக்கு பாடம் செல்லி தருகிற ஆசிரியை நான். இந்த 38 ஆண்டுகளில் என்னுடைய பெற்றோர், கணவர் அனைவரையும் இழந்து சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். என் மகள் டிகிரி முடித்திருக்கிறாள். இப்போதுதான் வேலை கிடைத்துள்ளது. அந்தந்த நாளுக்கு சம்பாதித்து வாழ்ந்து வருகிறோம். எல்லார் வீட்டிலும் இந்த நிலை தான். என் மகன் போல இருக்கிறாய் என்று முத்துலட்சுமி பேசிய வீடியோ பார்ப்பவரை கண்கலங்க வைக்கிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.