*கடல், மீன் வளத்துக்கு ஆபத்து; மீனவர்கள் அச்சம்
ராமேஸ்வரம் : தனுஷ்கோடி தென் கடலில் மிதந்து கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் மூலப்பொருளால், கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் அச்சத்தில் மீனவர்கள் உள்ளனர்.
கேரள மாநிலம் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கடந்த 24ம் தேதி 643 கண்டெய்னர்களுடன் கொச்சி சென்ற எம்எஸ்சி எல்சா.3 என்ற சரக்கு கப்பல் கொச்சிக்கு அருகே கடலில் மூழ்கியது. இந்த கப்பலில் 10க்கும் மேற்பட்ட கன்டெய்னர்களில் கால்சியம் கார்பைடு மற்றும் ஆபத்தான ரசாயனப் பொருட்கள் மற்றும் பல மூலப்பொருட்கள் இருந்தன.
இதனால் கண்டெய்னர்கள் கடற்கரையில் ஒதுங்கினால், பொதுமக்கள் யாரும் அதன் அருகே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து பல்வேறு கடற்கரையோர பகுதிகளில் கண்டெய்னர்கள் மற்றும் அதில் இருந்த பொருட்கள் கரை ஒதுங்கி வருகின்றன.
ராமேஸ்வரம் தனுஷ்கோடி தென்கடல் பகுதியில் நேற்று வெள்ளை நிறத்தில் சிறிய துகள்கள் கடற்கரையில் நுரை படிந்தது போல் சுமார் 5 கி.மீ தூரத்திற்கு காணப்பட்டது. மேலும் ஆங்காங்கே சாக்கு மூட்டைகளும் கரை ஒதுங்கி கிடந்தது.
புதிதாக இதை பார்த்த அப்பகுதி மீனவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ரோந்து பணியில் இருந்த மரைன் போலீசார், இந்திய கடலோர காவல் படையினர், கியூ பிரிவு போலீசார் அப்பகுதியை பார்வையிட்டனர்.
இதில் கரை ஒதுங்கிய வெள்ளை துகள்கள் கெமிக்கல் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் உயர் அடர்த்தி பாலிஎத்திலீன் ஆகும். பெட்ரோலியத்தில் இருந்து தயாரிக்கப்படும் பல்துறை தெர்மோ பிளாஸ்டிக் பாலிமர் ஆகும். மேலும் இதன் வலிமை, ஆயுள் மற்றும் ரசாயனங்களுக்கு எதிர்ப்புத் திறன் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது.
இது பிளாஸ்டிக் பொருட்கள், குழாய்கள் மற்றும் தொழில்துறை டிரம்கள் உள்ளிட்ட பல்வேறு பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் மூலப்பொருளாகும். இது கேரளாவில் மூழ்கிய சரக்கு கப்பலில் இருந்து கரை ஒதுங்கியது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடலில் மிதந்த இந்த பிளாஸ்டிக் மூலப்பொருள் மூட்டைகள் கிழிந்து துகள்களாக கடலில் கலந்ததால், தனுஷ்கோடி தென்கடற்கரை முழுவதும் தெர்மோ பிளாஸ்டிக் பாலிமர் கரை ஒதுங்கி அப்பகுதி மீனவர்களை அச்சம் அடைய செய்துள்ளது.
மேலும் கடலில் மிதந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட தெர்மோ பிளாஸ்டிக் பாலிமர் மூட்டைகளை இந்திய கடலோர காவல் படையினர் மீட்டு சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மன்னார் வளைகுடா கடலில் தெர்மோ பிளாஸ்டிக் பாலிமர் மிதந்து வருவதால் அப்பகுதி மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
தெர்மோபிளாஸ்டிக் பாலிமர் மூலப்பொருள் துகள்களாக கடலில் கலந்துள்ளதால், மீன்கள் இந்த பிளாஸ்டிக் துகள்களை உட்கொள்ளும் அபாயம் உள்ளது. இதனால் கடல் வாழ் உயிரினங்களுக்கு உடல்நலப் பாதிப்புகள், இனப்பெருக்கக் கோளாறுகள், வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது போன்ற பல விளைவுகள் ஏற்படும். மைக்ரோ பிளாஸ்டிக்குகள் மீன்களின் செரிமான மண்டலத்தில் சேர்வதால், செரிமான கோளாறுகள், நச்சுத்தன்மைகள் போன்ற ஆபத்துக்கள் உள்ளன.
மேலும் பிளாஸ்டிக் துகள்கள் மீன்களின் சுவாச உறுப்புகளை பாதிக்கும் என்பதால், இதை உண்ணும் மீன்கள் செத்து மிதக்கும் அபாயமும் உள்ளது என கடல் மீன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். தனுஷ்கோடி கடற்கரையில் பிளாஸ்டிக் துகள்களை மீன்வளத்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.