திருப்பூர்: கேரளாவில் தனியார் வங்கியில் கவரிங் வைத்து 575 சவரன் நகையை சுருட்டிய மேலாளர் கைது செய்யப்பட்டார். திருப்பூரில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளை கேரள போலீசார் மீட்டனர்.
திருச்சி மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மதா ஜெயக்குமார் (34). இவர், கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடகரை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஜூலை மாதம் எர்ணாகுளத்தில் உள்ள பலாரிவடம் கிளைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அந்த கிளைக்கு சென்று மதா ஜெயக்குமார் மேலாளராக பொறுப்பேற்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், வடகரை வங்கி கிளையில் வங்கி அதிகாரிகள் தணிக்கை செய்தனர். அப்போது வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த நகைகள் போலி (கவரிங்) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில், கேரளா மாநிலம் வடகரை போலீசார் வழக்குப்பதிந்து மதா ஜெயக்குமாரை கைது செய்தனர். போலீசார் விசாரணையில் வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த 4.60 கிலோ எடையுடைய சுமார் 575 பவுன் நகைகளை திருப்பூரை சேர்ந்த தனது நண்பரான தனியார் வங்கி பணியாளர் கார்த்தி உதவியுடன் திருப்பூர் புஷ்பா சந்திப்பில் உள்ள தனியார் வங்கியில் 17 நபர்களின் பெயரில் வைத்து பணம் பெற்றது தெரியவந்தது.
இதையடுத்து கேரள போலீசார் மதா ஜெயக்குமாரை திருப்பூர் தனியார் வங்கிக்கு நேற்று முன்தினம் இரவு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அந்த வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த 4.60 கிலோ தங்க நகைகளையும் மீட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய திருப்பூர் தனியார் வங்கி பணியாளர் கார்த்திக் தலைமறைவாக உள்ளார். அவரை கேரள போலீசார் தேடி வருகின்றனர்.