திருவனந்தபுரம்: அகமதாபாத் விமான விபத்தில் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் புல்லாடு பகுதியை சேர்ந்த ரஞ்சிதா (39) என்ற நர்சும் பலியானார். அவரது உடல் டிஎன்ஏ பரிசோதனை மூலம் நேற்று முன்தினம் தான் அடையாளம் காணப்பட்டது. இந்தநிலையில் ரஞ்சிதாவின் உடல் விமானம் மூலம் நேற்று காலை திருவனந்தபுரத்திற்கு கொண்டுவரப்பட்டது. விமான நிலையத்தில் கேரள அமைச்சர்கள் சிவன்குட்டி, அனில் ஆகியோர் தலைமையில் உடலை பெற்றுக் கொண்டனர்.
பின்னர் அனைத்து கட்சி தலைவர்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ரஞ்சிதாவின் உடல் அவரது சொந்த ஊரான பத்தனம்திட்டா மாவட்டம் புல்லாடுக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் படித்த புல்லாடு ஸ்ரீவிவேகானந்தா பள்ளியில் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், மாலையில் வீட்டுத் தோட்டத்தில் ரஞ்சிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.