டெல்லி: கேரளா, கர்நாடகாவில் இன்று ஓரிரு இடங்களில் மிக மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடமாநிலங்களில் பருவமழை பெய்துவரும் நிலையில் இன்று கேரளா, கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகாவில் ஓரிரு இடங்களில் இன்று 21 செ.மீ.க்கும் அதிகமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் மகாராஷ்டிரா, தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்திற்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல கனமழை காரணமாக கோவா பள்ளிக் கல்வித்துறை இன்று பள்ளிகளுக்கு விடுமுறையும் அளித்துள்ளது. கேரள மாநிலத்தின் மலப்புரம், கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, வயநாடு பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து நாளை பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் மலப்புரம் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் மற்றும் கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. மீனவர்கள் மேற்குறிப்பிட்ட இரண்டு நாட்களிலும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.