திருநெல்வேலி அல்வா, சேலத்து மாம்பழம், திருவில்லிபுத்தூர் பால்கோவா, பண்ருட்டி பலா என்று ஒவ்வொரு ஊருக்கென்று ஒரு தனிச்சிறப்பு இருக்கும். அது அந்தந்த ஊரின் அடையாளமாகவும் இருக்கும். அதுபோல கேரள மாநிலம் பாலக்காடு, கண்ணூர் போன்ற பகுதிகளின் அடையாளமாக இருக்கிறது மாக்கல் சட்டி. இந்த பகுதிகளில் இன்றைக்கும் பெரும்பாலான இடங்களில் இந்தக் கல் சட்டிகளில்தான் சமையல் நடக்கிறது. அதுவும் திருவிழாக்காலங்களில் மக்கள் போட்டி போட்டுக்கொண்டு இந்த மாக்கல் சட்டியை வாங்குகிறார்கள். அந்தளவுக்கு அவர்களுக்கு மாக்கல் சட்டி விசேஷம். இத்தகைய சிறப்பு மிக்க மாக்கல்லின் பூர்வீகம் நம்ம தமிழகத்தின் சேலம், நாமக்கல் மாவட்டங்கள்தான். சரியாக முற்றாத கருங்கல்லையே மாக்கல் என்கிறார்கள்.
இந்தக் கல்லில் இருந்து சட்டி மட்டுமில்லை, தோசைக்கல் உள்ளிட்ட பாத்திரங்களும் தயாரித்து பயன்படுத்துகிறார்கள். உலோகங்கள் அதிகளவில் பயன்பாட்டில் இல்லாத சமயத்தில் மண்பாண்டத்தில் எப்படி வகை, வகையான பாத்திரங்கள் செய்தார்களோ, அதேபோல மாக்கல்லில் இருந்தும் பாத்திரங்கள் செய்திருக்கிறார்கள். இரும்பு, ஈயம், பித்தளை உள்ளிட்ட உலோகங்களில் இருந்து பாத்திரங்கள் தயாரித்து பயன்படுத்தும் காலகட்டத்திலும் மாக்கல்லை உடைத்து, அதில் இருந்து தயாரிக்கப்படும் சமையல் சாதனங்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. மாக்கல்லினால் ஆன பருப்புச்சட்டி, பணியாரச்சட்டி, தோசைக்கல் உள்ளிட்டவற்றை விறகடுப்பில் வைத்து சமையல் செய்யும்போது, அந்தக் கல்லின் சூடு தன்மை நீண்ட நேரம் நீடிக்கிறது.
அதுமட்டுமின்றி, கல்லில் இருக்கும் ஒருவித காரத்தன்மை, சமையலுக்கு சுவையையும், ருசியையும் கூடுதலாகவே கொடுக்கிறது. இதன் எடை சற்று அதிகமாக இருக்கும். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளி பகுதியில் மாக்கல்லில் இருந்து பாத்திரங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கு மாக்கல்லை உடைத்து பல்வேறு வடிவங்களில் உள்ள அச்சுகளில் மாக்கல்லை நிரப்பி பாத்திரங்களை வார்த்தெடுக்கிறார்கள். இவற்றை எடுத்து சென்று கேரள பகுதிகளில் விற்பனை செய்கிறார்கள். கல்சட்டி என்றும் அழைக்கப்படும் மாக்கல்லால் செய்யப்பட்ட பாத்திரங்கள் மற்றும் பொருட்கள் பெரும்பாலும் உணவு தயாரிக்கவே பயன்படுகிறது. கல்சட்டி செய்வதற்கு பயன்படும் மாக்கல்லில் மக்னீசியம் இருப்பதால், நேரடியாக உணவில் இந்த சத்து கலக்கிறது.
நன்கு பழகிய கல்சட்டியில் வத்தல் குழம்பு செய்வார்கள். மெல்லச் சூடானாலும் சூடு நின்று தாங்கி சரியான அளவில் கொதிக்கும். நீண்டநேரம் சூடு நிற்கும். இதன் காரணமாகவே கேரளப் பகுதிகளில் இதை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். அடுப்புக்கு என்று மட்டுமில்லை. பழைய சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கவும் கல்சட்டி ஸ்பெஷல் சாய்ஸ். மறுநாள் காலை தண்ணீர் ஊற்றிய சாதத்தில் முதல் நாள் உறைஊற்றி வைத்த தயிரைக் கலந்து சின்ன வெங்காயம், பச்சை மிளகாயைக் கடித்துக்கொண்டு சாப்பிடுவார்கள். தென் தமிழகத்தில் இன்றைக்கும் மக்கள் ஊறுகாய் போடுவதற்கு கல்சட்டியினையே பயன்படுத்துகிறார்கள்.