திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் அமீபா மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 பேருக்கு திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் கடந்த சில மாதங்களாக மூளையை தின்னும் அமீபா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பொதுவாக தேங்கியிருக்கும் தண்ணீர், மாசுப்பட்ட குளம், ஏரி, கிணறு , நீச்சல்குளம், போன்றவற்றில் குளிக்கும் போது அதில் உள்ள ஒருவகையான அமீபா மூக்கு வழியாக உள்ளே மூளைக்கு சென்றுவிடுகிறது.
கொஞ்சம் கொஞ்சமாக மூளையின் திசுக்களை தின்று மூளை வீக்கத்தை ஏற்படுத்துகிறது. அதீத தலைவலி, தொடர் காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை ஆரம்ப அறிகுறிகள் ஆகும். இந்த அமீபா வளரும்போது, கழுத்து இறுக்கமாவது, சுற்றுப்புறங்களில் கவனமின்மை, சமநிலை இழப்பு மற்றும் மாயத்தோற்றங்கள் ஆகியவையும் ஏற்படுக்கூடும். அமீபா வேகமாக வளரக்கூடியது என்பதால், விரைந்து கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால் உயிரிழப்பு ஏற்பட கூட வாய்ப்புள்ளது என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் 4 பேர் அமீபா மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. திருவனந்தபுரம் கன்னரவிளையை சேர்ந்த அகில் (26) என்பவர் கடந்த மாதம் 23ம் தேதி அமீபிக் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்தார். இதையடுத்து அகிலுடன் குளத்தில் குளிக்க சென்ற அவருடைய நண்பர்கள் 4 பேர் அனிஷ் (26), அச்சு (25), ஹரிஷ் (27), தனுஷ் (26) ஆகியோருக்கு மூளை காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட பரிசோதனையில் அவர்களில் ஒருவருக்கு அமீபா மூளைக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மூவரின் பரிசோதனையில் மூவருக்கு அமீபா மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் 4 பேரும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து தேங்கி நிற்கும் நீர்நிலைகளில், குறிப்பாக பாசிகள் வளர்ந்துள்ள நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்க்குமாறு அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் அறிவுறுத்தியுள்ளார்.