சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் அருகே கேர்மாளம் மலைப்பகுதியில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 3 பயணிகள் காயமடைந்தனர்.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கேர்மாளம் மலைப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமங்களுக்கு சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் வழியாக கேர்மாளம் செக்போஸ்ட் வரை அரசு பஸ் இயக்கப்படுகிறது. நேற்று மதியம் சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் வழியாக கேர்மாளம் செக்போஸ்ட் நோக்கி 20க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
பூதாளபுரம் அருகே வி.எம்.தொட்டி என்ற இடத்தில் பஸ் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக பஸ்சின் ஓட்டுனர் பஸ்சை ஓரமாக இயக்கினார். அப்போது பஸ் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 3 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. பஸ்சில் சிக்கிய 20க்கும் மேற்பட்ட பயணிகளை மலை கிராம மக்கள் பாதுகாப்பாக மீட்டனர். காயமடைந்த பயணிகள் கேர்மாளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.