சென்னை: கேரளாவில் ஹேமா கமிஷன் போன்று தமிழ் திரைப்பட உலகிலும் ஒரு குழு விரைவில் அமைக்கப்படும் என நடிகர் விஷால் அறிவித்துள்ளார். கேரளாவில் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்ட ஹேமா கமிட்டி அறிக்கையால் கேரளா திரைப்பட உலகம் கடும் அதிர்ச்சியை சந்தித்துள்ளது.பெண்களுக்கு, குறிப்பாக திரைத்துறையில் பணியாற்றி வரும் பெண்களுக்கு பாலியல் ரீதியாக ஏற்படும் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்ய 5 ஆண்டுகளுக்கு முன்னர் கேரளாவில் ஹேமா கமிட்டி நிர்ணயம் செய்யப்பட்டது.
இதன் அறிக்கை சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அது மொத்தம் 235 பக்கங்களைக் கொண்டதாகும். இதில் 51 பெண்களிடம் ஆய்வு செய்யப்பட்ட வகையில், திரைத்துறை சார்ந்த பல பெண்கள் கொடுத்துள்ள வாக்குமூலங்கள் பகிர் ரகமாக உள்ளன. இந்தநிலையில், நடிகர் விஷால் தனது 48வது பிறந்தநாளை ஒட்டி சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் காலை உணவு வழங்கினார். பின்னர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் ஹேமா கமிஷன் போல் ஒரு குழு அமைக்க நடிகர் சங்கம் சார்பில் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக விஷால் தகவல் தெரிவித்தார்.
யாராக இருந்தாலும் பெண்களை இதுபோன்று பயன்படுத்த நினைப்பவர்களுக்கு தண்டனை கிடைத்தாக வேண்டும். தமிழ் சினிமாவிலும் காலம் காலமாக குற்றச்சாட்டு உள்ளது; இங்கும் அதுபோல் பிரச்சனைகள் இருக்கலாம். தமிழ் திரையுலகில் என்ன நடக்கிறது என்பதை கண்டுபிடிக்க நாங்கள் போலீஸ் இல்லை. நடிகைகள் யாராவது தங்களிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் கொடுத்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். யாராவது வந்து அட்ஜெஸ்மெண்ட்க்கு அழைத்தால் செருப்பால் அடியுங்கள் என்று நடிகர் விஷால் ஆவேசம் தெரிவித்தார்.