கூடலூர்: கேரள வனத்துறை, நீர்வளத்துறை அதிகாரிகள் போட்ட முட்டுக்கட்டையால் பருவமழைக்கு முன்பான பராமரிப்பு பணிகள் அனைத்து முடங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பருவநிலை மாற்றங்களின் போது இரு மாநில அதிகாரிகளும், மத்திய நீர்வளத்துறை அதிகாரிகளும் கொண்ட மத்திய கண்காணிப்பு குழு மற்றும் துணை கண்காணிப்பு குழு ஆகியவை அணையை ஆய்வு செய்து அந்த ஆய்வின் அடிப்படையில் அணையின் மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்பு உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஆனால் கேரள அரசு அங்குள்ள வனத்துறை மற்றும் நீர்வளத்துறை மூலமாக பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளை தமிழக பொதுப்பணி துறையினர் மேற்கொள்ள விடாமல் பல்வேறு இடையூறுகளையும் செய்து வந்ததோடு, தடுத்தும் வந்தனர். தொடர்ச்சியாக அணை பராமரிப்பு பணிகள் செய்யவிடாமல் தடுத்ததோடு, அணையின் பலம் குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் வதந்திகளையும் கேரளத்தில் உள்ள அமைப்புகளும், தனி நபர்களும் பரப்பி வந்தனர். இதை மையப்படுத்தி கேரளத்தில் உள்ள சில அமைப்புகள் பெரியாறு அணையினால் இயற்கை பேரிடர் ஏற்பட போவதாகவும், புதிய அணை கட்ட வேண்டும் என்றும் பொய் பிரசாரத்தையும், போராட்டங்களையும் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கண்டித்தும் தமிழக விவசாய சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் வழக்கமான பராமரிப்பு பணிகளை அணையில் மேற்கொள்வதற்காக தமிழக பொதுப்பணித்துறையினர் வல்லக்கடவு பாதை வழியாக தளவாடப் பொருட்களை எடுத்துக் கொண்டு சென்ற போது கேரள வனத்துறையினர் வல்லக்கடவு சோதனைச் சாவடியில் பராமரிப்புக்காக தளவாடப் பொருட்களை எடுத்துக் கொண்டு சென்ற வாகனங்களையும், தமிழக பொதுப்பணித்துறையினரையும் தடுத்து நிறுத்தினர்.
இதைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், தமிழக அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க சில பணிகளுக்கு மட்டும் நடைமுறையில் இல்லாத விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளோடு கேரள அரசு அனுமதித்தது. ஆனால் அணையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய பராமரிப்பு பணிகளுக்கு இதுவரை அனுமதி வழங்காமல் கேரள அரசு தடுத்து வருகிறது. ஏற்கனவே உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி பெரியாறு அணையில் தற்போது தேக்கி வரும் நீர்மட்ட அளவு 142 அடியிலிருந்து 152 அடியாக நீர்மட்டத்தை உயர்த்திக்கொள்ள ஏதுவாக பேபி அணை பலப்படுத்துவதற்கும், பேபி அணையை பலப்படுத்துவதற்கு செல்ல உள்ள வல்லக்கடவு சாலையை சீரமைப்பு செய்வதற்கும் கேரளா அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
இது சம்பந்தமாக இரு மாநில அரசுகளின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கும், வல்லக்கடவு சாலையை தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக சீர் செய்வதற்கும், பேபி அணையை பலப்படுத்துவதற்கு தடையாக உள்ள மரங்களை வெட்டுவது உட்பட சில உத்தரவுகளை பிறப்பித்து நான்கு வார கால அவகாசத்துக்குள் கேரள அரசு பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
தற்போது தென்மேற்கு பருவமழை கேரளாவில் துவங்கியுள்ள நிலையில் கடந்த மூன்று மாத கோடை காலங்களில் மெயின் அணை, பேபி அணை, கேலரி உள்ளிட்ட பகுதியில் பராமரிப்பு பணிகள் செய்ய முடியவில்லை. தொடர்ந்து காலநிலை மாற்றங்களின் போது செய்ய வேண்டிய பராமரிப்பு பணிகளை செய்ய விடாமல் இழுத்தடித்தும் தடுத்தும் வரும் கேரள அரசிற்கு தமிழக அரசு சட்டரீதியாக எதிர்கொண்டு வருவதோடு, உச்ச நீதிமன்றமும், நீதிபதிகளும் கேரளா அரசின் இத்தகைய செயல்பாடுகளை கண்டித்தும், உத்தரவிட்டும் வருகின்றனர். ஆனால் கேரளா அரசு தொடர்ந்து ஏதாவது ஒரு வகையில் அணையில் பராமரிப்பு பணிகள் செய்ய விடாமல் இந்நாள் வரை தடுத்து வருகிறது. கேரளாவில் பருவ மழை துவங்கிய நிலையில் கடந்த கோடை காலங்களில் செய்ய வேண்டிய பராமரிப்பு பணிகள் முடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.