திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சி நகரின் மையப்பகுதியில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டம் நடந்த அரங்கத்தில் இன்று காலை பயங்கர குண்டு வெடிப்பு நடந்தது. இதில் பெண் ஒருவர் பலியானார். 35 பேர் படுகாயமடைந்தனர். இதில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கேரள மாநிலம் கொச்சி, களமசேரியில் உள்ள ஒரு அரங்கத்தில் யெகோவா கிறிஸ்தவ சபையின் 3 நாள் ஜெபக்கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. இன்று கடைசி நாள் கூட்டம் நடைபெற்றது. இன்று காலை சுமார் 9 மணிக்கு ஜெபக்கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் 2500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில் காலை சுமார் 9.30 மணி அளவில் திடீரென அரங்கத்தின் உள்ள மேடைக்கு அருகே திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. மொத்தம் 3 முறை இந்த குண்டு வெடித்தது. இதனால் அரங்கத்தில் இருந்த நாற்காலிகள் தீ பிடித்து எரியத் தொடங்கியது. உடனே அரங்கத்தில் இருந்தவர்கள் அலறியடித்தபடி அங்கிருந்து ஓடத் தொடங்கினர். இந்த குண்டு வெடிப்பில் சம்பவ இடத்திலேயே பெண் ஒருவர் உடல் கருகி பரிதாபமாக இறந்தார். 35 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து காயம் அடைந்தவர்களை மீட்டு கொச்சி களமசேரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் 7 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. குண்டுவெடிப்புக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இந்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) உள்பட மத்திய உளவுத்துறையினரும் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
உஷார் நிலை
இந்த குண்டுவெடிப்பு கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் இந்த நாச வேலையில் ஈடுபட்டது யார்? என்பது உடனடியாக தெரியவில்லை. குண்டுவெடிப்பை தொடர்ந்து கேரளா முழுவதும் உஷார் நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி ரயில், பஸ் நிலையம் உள்பட மக்கள் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இது தவிர மாநிலம் முழுவதும் கண்காணிப்பை அதிகரிக்க அனைத்து மாவட்ட எஸ்பிக்களுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இது குறித்து யெகோவா கிறிஸ்தவ சபையின் செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகுமார் கூறியது: இன்று காலை சுமார் 9.30 மணி அளவில் ஜெபக்கூட்டம் தொடங்கியது. அனைவரும் கண்களை மூடி பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தனர். அரங்கத்திற்குள் 2500க்கும் மேற்பட்டோர் இருந்தனர். திடீரென மையப்பகுதியில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. சிறிது நேரத்திலேயே அடுத்தடுத்து இடது, வலது புறத்திலுமாக குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது.
உடனே அங்கு தீப்பிடித்தது. ஒருவரது உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் பலருக்கு தீக்காயம் ஏற்பட்டது. குண்டுவெடிப்புக்கு என்ன காரணம்? என்று தெரியவில்லை. அரங்கத்திற்குள் சமையல் எரிவாயுவோ, எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களோ எதுவும் வைக்கப்படவில்லை. 2 டிவிக்கள் மட்டுமே இருந்தன. மின் கசிவு ஏற்பட்டால் கூட இந்த அளவுக்கு சத்தத்துடன் வெடித்திருக்காது. குண்டுவெடிப்பு நடந்த இடத்தை தற்போது போலீசார் சீல் வைத்து உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் உத்தரவு
குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்கள் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள 2 அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். எர்ணாகுளம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 20க்கும் மேற்பட்டோருக்கு தீக்காயம் ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையே எர்ணாகுளம், கோட்டயம் மாவட்டங்களில் விடுமுறையில் உள்ள டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள் உடனே பணிக்குத் திரும்ப வேண்டும் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டு உள்ளார்.
டிபன் பாக்ஸ் குண்டு
இதற்கிடையே கொச்சியில் உள்ள என்ஐஏ, மத்திய உளவுத்துறை அதிகாரிகளின் விசாரணையில் கூட்ட அரங்கில் வெடித்தது டிபன் பாக்ஸ் குண்டு என்பது தெரியவந்து உள்ளது. இது தொடர்பான முக்கிய ஆதாரங்கள் போலீசிடம் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இது தீவிரவாதிகளின் சதி செயலாக இருக்கலாம்? என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
முதல்வருடன் அமித்ஷா டெலிபோனில் பேச்சு
குண்டு வெடிப்பு குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியது: கொச்சி களமசேரியில் கிறிஸ்தவ ஜெப மாநாட்டில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் பலியாகி உள்ளார். 23 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 2 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. சம்பவம் குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குண்டு வெடிப்புக்கு என்ன காரணம்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணைக்குப் பின்னரே இந்த செயலுக்கு யார் காரணம் என்பது குறித்து தெரியவரும் என்றார்.
கொச்சியில் கிறிஸ்தவ ஜெபக்கூட்ட அரங்கில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து அறிந்ததும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேரள முதல்வர் பினராயி விஜயனை டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது குண்டுவெடிப்பு எப்படி ஏற்பட்டது? என்பது குறித்த விவரங்களை அவர் கேட்டறிந்தார்.