திருவனந்தபுரம்: கேரளாவில் மலையோரப் பகுதிகளில் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை விதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கேரளாவில் மலையோரப் பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுவை நேற்று விசாரித்த டிவிஷன் பெஞ்ச், மலையோரப் பகுதிகளில் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவில் கூறியிருப்பதாவது: 5 லிட்டருக்கு குறைவான குடிநீர் பாட்டில்களையும் விற்பனை செய்யக்கூடாது.
தண்ணீர் குடிப்பதற்கு ஸ்டீல், காப்பர் கிளாசுகளை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும். பொது இடங்களில் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.இதற்காக குடிநீர் வழங்கும் தானியங்கி உபகரணங்களை அமைக்க வேண்டும்.
வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி தினம் முதல் இந்த தடை உத்தரவு அமலுக்கு வரும். பிளாஸ்டிக் தடை அமல்படுத்தப்படுவதை தலைமைச் செயலாளரும், உள்ளாட்சித் துறை செயலாளரும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு உயர்நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.