கேரளா: வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு கேரளாவில் 2 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. இன்றும், நாளையும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும். வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 97 பேர் உயிரிழந்தனர்.100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகின்ற நிலையில் கேரள மாநிலம் வயநாட்டில் ஜூலை 29 அன்று கனமழை கொட்டித் தீர்த்தது. தொடர் கனமழை காரணமாக கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இம்மாவட்டத்தின் மேப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பல்வேறு இடங்கள் இந்த நிலச்சரிவால் வலுவாக பாதிக்கப்பட்டுள்ளன.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு ஒரேநாளில் 300 மில்லி மீட்டர் அளவு மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை தொடர்ந்து நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் இன்றும் கேரளாவின் வயநாடு உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவால் சூரல்மலா பகுதியில் மட்டும் 400 குடும்பங்கள் சிக்கிக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அட்டமலா – முண்டக்கையை இணைக்கும் ஒரே பாலம் வெள்ளம், நிலச்சரிவில் சேதமடைந்த நிலையில் மீட்புப் பணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
நிலச்சரிவில் காயமடைந்தோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. இதுவரை, உள்ளூர் மருத்துவமனையில் காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றும் ஏறத்தாழ 250-க்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.