திருப்போரூர்: கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கத்தில் வண்டலூர் சாலையில் தனியாருக்கு சொந்தமான மருந்து தயாரிக்கும் நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி கூடம் உள்ளது. இங்கு வைட்டமின் ஜெல் மாத்திரை தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. முதல் மாடியில் மருந்துகள் தயாரிப்பிற்கான ஆராய்ச்சிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இதே வளாகத்தில் பாய்லர்களுடன் கூடிய தொழிற்சாலையின் ஒரு பகுதி இயங்கி வருகிறது.
இந்த, தொழிற்சாலையில் 540 நிரந்தர பணியாளர்களும் 200க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களும் வேலை செய்து வருகின்றனர். நேற்று மாலை 3 மணியளவில் பாய்லர்கள் உள்ள பகுதியில் ஒரு குழாய் உடைந்ததால் அதை சரி செய்வதற்காக வெல்டிங் இயந்திரம் கொண்டு வரப்பட்டு ஊழியர்கள் அப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக வெல்டிங் மெஷினில் இருந்து தீப்பொறி பறந்து மருந்து கலவை இருக்கும் இடத்தில் விழுந்து திடீரென தீப்பிடித்தது. இதை அணைப்பதற்கு ஊழியர்கள் முயற்சித்தனர்.
ஆனால், அதற்குள் தீ மளமளவென பரவி அந்த பகுதி முழுவதும் எரிய தொடங்கியது. இதனால், கரும்புகை வெளியேறி முதல் மாடி மற்றும் இரண்டாவது மாடி முழுவதும் பரவியது. அப்போது தொழிற்சாலை, ஆராய்ச்சி கூடம், அலுவலகம் ஆகிய இடங்களில் பணி புரிந்து வந்த 500க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் தொழிற்சாலை வளாகத்தை விட்டு வெளியே ஓடி வந்தனர். இதைத்தொடர்ந்து சிறுசேரி தீயணைப்பு நிலையம் மற்றும் கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தொழிற்சாலை வளாகத்தில் உள்ள தீயணைப்பு கருவிகள் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, சிறுசேரி தீயணைப்பு படையினர் வந்து ஊழியர்களின் உதவியுடன் கண்ணாடிகளை உடைத்து உள்ளே சிக்கி இருந்த ஊழியர்களை மீட்டனர். மேலும், தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களும், அருகில் இருந்த தொழிற்சாலைகளில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களும் கொண்டு வரப்பட்டன.
இந்த தீ விபத்தில் கரும்புகையில் சிக்கி 1 ஆண் மற்றும் 6 பெண் ஊழியர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இவ்விபத்து குறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீ விபத்து ஏற்பட்டது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
* ஊழியர்களே முதலுதவி
இந்த தொழிற்சாலையில் 300க்கும் மேற்பட்ட பெண்கள், மாத்திரை தயாரிக்கும் பிரிவு மற்றும் ஆராய்ச்சிப்பிரிவில் பணியாற்றுகின்றனர். தீ விபத்து ஏற்பட்டது தெரிந்ததும் அனைத்து பெண் ஊழியர்களும் பாதுகாப்பாக வெளியில் வந்தனர். மேலும், வருகைப் பதிவேட்டை வைத்து வேறு யாராவது உள்ளே சிக்கி இருக்கிறார்களா என்று ஆய்வு செய்தனர். மேலும், விபத்தில் சிக்கிய ஊழியர்களுக்கு அவர்களே முதலுதவி செய்து ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபோன்ற விபத்து நேரங்களில் பெண்கள் பதற்றம் அடையாமல் சமயோசிதமாக செயல்பட்டு 100 கணக்கானோரை காப்பாற்றியதை பலரும் பாராட்டினர்.
* உயிர் சேதம் இல்லை
பொதுவாக தொழிற்சாலைகளில் பாதுகாப்பு கருவிகள் பல பொருத்தப்பட்டு இருந்தாலும் அவை சரியாக வேலை செய்யாத நிலையிலேயே இருக்கும். ஆனால், தீ விபத்து ஏற்பட்ட உடன் அலாரம் அடித்ததும் ஊழியர்கள் பலரும் ஓடிச்சென்று தீயணைப்பு கருவிகளை இயக்கி தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். அந்த அளவிற்கு அனைத்து கருவிகளும் செயல்பாட்டில் இருந்துள்ளன. இதன் காரணமாகவே பெரிய அளவில் தீவிபத்து ஏற்பட்டும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.