திருப்போரூர்: கேளம்பாக்கம் அருகே படூரில் நள்ளிரவில் கல்லூரி மாணவனை கத்தியால் வெட்டி செல்போன், செயின் பறிக்க முயன்ற 2 வாலிபர்களை, போலீசார் கைது செய்தனர். கேளம்பாக்கம் அருகே படூரில் தனியார் மாணவர்கள் தங்கும் விடுதி உள்ளது. இதில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்கி, இப்பகுதியில் உள்ள கல்லூரிகளில் படித்து வருகின்றனர். அங்கு, தங்கியிருந்த அபினேஷ் (19) என்ற மாணவன் கடந்த 9ம்தேதி இரவு நாவலூரில் உள்ள ஷாப்பிங் மால் மற்றும் திரையரங்கத்திற்கு சென்றுவிட்டு, நள்ளிரவு 11.30 மணிக்கு தங்களது அறைக்கு திரும்பி உள்ளார்.
அப்போது, தங்கும் விடுதியின் வாயிற்கதவு பூட்டப்பட்டு இருந்தது. இதனால், செக்யூரிட்டிக்கு அழைப்பு விடுத்து மாணவன் வெளியே காத்திருந்தபோது, பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் அபினேஷை மிரட்டி செல்போனையும், கழுத்தில் அணிந்திருந்த செயினையும் தருமாறு கேட்டனர். அதற்கு, அபினேஷ் மறுக்கவே மறைத்து வைத்திருந்த கத்தியால் தலை மற்றும் இடது கையில் வெட்டினர். இதில், பலத்த காயமடைந்த அபினேஷ் கூச்சல் ேபாட்டார். சத்தம்கேட்டு, தங்கும் விடுதியில் இருந்து ஊழியர்களும், சக மாணவர்களும் ஓடி வந்ததை கண்ட மர்ம நபர்கள், அங்கிருந்து பைக்கில் தப்பிச்சென்றனர்.
பின்னர், அபினேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த கேளம்பாக்கம் போலீசார், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். ஆய்வின் அடிப்படையில் மோட்டார் சைக்கிளில் வந்து அபினேஷை வெட்டியது தையூர் இளவந்தாங்கல் பகுதியை சேர்ந்த அஸ்வின் (19), கேளம்பாக்கம் அண்ணா நகரைச் சேர்ந்த சாகுல் அமீது (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் நேற்று கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து பைக் மற்றும் கத்தியை பறிமுதல் செய்தனர். மேலும், கைதான 2 பேரை திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.