திருப்போரூர்: கேளம்பாக்கத்தில் இன்று காலை 6 மணியளவில் பூட்டியிருந்த துணிக்கடை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் ரூ.1 கோடி மதிப்பிலான துணிகள் உள்பட பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமாகின. அக்கடையில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட வீரர்கள் மற்றும் போலீசாருக்கு சைக்கிளில் டீ விற்பவர், இலவசமாக டீ வழங்கிய மனிதநேய செயலை அனைவரும் பாராட்டினர். சென்னை தி.நகர் பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (46), அப்துல்லா.
இவர்கள் இருவரும் கேளம்பாக்கம், ஓஎம்ஆர் சாலையில் மாஸ் டெக்ஸ்டைல்ஸ் எனும் பெயரில் துணிக்கடை நடத்தி வருகின்றனர். இக்கடையின் தரைதளம், முதல் மற்றும் 2வது தளத்தில் பல்வேறு வகையான துணி ரகங்கள் மற்றும் ரெடிமேடு ஆடைகள், அழகுசாதன பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இதற்கிடையே நேற்றிரவு வழக்கம் போல் வியாபாரம் முடிந்து துணிக்கடையை பூட்டிவிட்டு, கடை உரிமையாளர்களான ஜாகிர் உசேனும் அப்துல்லாவும் சென்னை வீட்டுக்கு கிளம்பி சென்றுள்ளனர்.
இந்நிலையில், கேளம்பாக்கம் ஓஎம்ஆர் சாலையில் இன்று காலை 6 மணியளவில் பூட்டியிருந்த ஜாகிர் உசேனின் துணிக்கடையில் இருந்து அதிகளவில் கரும்புகை எழுந்தது. சிறிது நேரத்தில் அந்த துணிக்கடை திடீரென தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது. இதுகுறித்து கடை உரிமையாளர்களுக்கும் போலீசாருக்கும் அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். கடை உரிமையாளர்கள் சென்னையில் இருந்து வருவதற்குள், துணிக்கடையின் தரைதளம், முதல் மற்றும் 2வது தளத்துக்கு தீ மளமளவென பரவியது. இதனால் அங்கிருந்த துணிமணிகள் மற்றும் அழகுசாதன பொருட்களில் தீப்பிடித்து வெடித்து சிதறின.
இதைத் தொடர்ந்து சிறுசேரி, திருப்போரூர், மேடவாக்கம் பகுதிகளில் இருந்து மாவட்ட தீயணைப்பு துறை உதவி அலுவலர் திருநாவுக்கரசு தலைமையில் தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி, காலை 9 மணியளவில் துணிக்கடையின் 3 மாடிகளில் பரவியிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சியடித்து அணைத்தனர். இவ்விபத்தில், கடையில் இருந்த சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமாகிவிட்டன. இதை பார்த்து கடை உரிமையாளர்களும் அவர்களின் குடும்பத்தினரும் கதறி அழுதனர்.
தீயணைப்பு பணிகளின்போது அவ்வழியே சைக்கிளில் டீ விற்கும் தொழிலாளி ஒருவர், தான் டிரம்மில் கொண்டு வந்த மொத்த டீயையும் கப்புகளில் ஊற்றி தீயணைப்பு படையினர் மற்றும் போலீசாருக்கு இலவசமாக வழங்கினார். அவரது மனிதநேய செயலுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்தனர். தீயணைப்பு பணிகளின்போது அப்பகுதி மக்களும் வாளிகளில் தண்ணீரை கொண்டு வந்து உதவி செய்தனர். இதனால் அப்பகுதியில் திருப்போரூர் நோக்கி வந்த அனைத்து பேருந்துகளும் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. இதனால் ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் கிளாட்சன் ஜோஸ் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், துணிக்கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.