புதுடெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான விவகாரத்தில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அமலாக்கத்துறை ெதாடர்ந்த வழக்கில் ஜூன் 20ம் தேதி டெல்லி விசாரணை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால் அமலாக்கதுறையின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், விசாரணை நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஜாமீன் உத்தரவுக்கு தடை விதித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கெஜ்ரிவாலுக்கு கடந்த ஜூலை 12ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இருப்பினும் இதே விவகாரத்தில் சிபிஐ வழக்கு பதிவு செய்து கெஜ்ரிவாலை கைது செய்துள்ளதால், இடைக்கால ஜாமீன் கிடைத்தும் கெஜ்ரிவாலால் சிறையில் இருந்து வெளியில் வரமுடியவில்லை. இதையடுத்து மதுபானக் கொள்கை வழக்கு விவகாரத்தில் சிபிஐ கைது நடவடிக்கைக்கு எதிராகவும், சிபிஐ வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரியும் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ‘கெஜ்ரிவால் கைது நடவடிக்கையை சட்டவிரோதம் என்று கூற முடியாது. சிபிஐ தொடர்ந்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க முடியாது’ எனக்கூறி அவரது மனுவை கடந்த 5ம் தேதி தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கெஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘டெல்லி மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் தகுதியின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரித்து தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும். சிபிஐ கைது நடவடிக்கையை சட்ட விரோதம் என்று அறிவிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் பெற்று இருக்கும் கெஜ்ரிவால், தற்போது சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கும் பட்சத்தில் அவர் விரைவில் சிறையில் இருந்து வெளியில் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.