சண்டிகர்: டெல்லியில் லூதியானா மேற்கு சட்டமன்ற தொகுதியின் ஆம் ஆத்மி எம்எல்ஏவான குர்பிரீத் பாஷி கோகி அவர் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கி தற்செயலாக வெடித்ததில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் இன்னும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் லூதியானா மேற்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஆம் ஆத்மியின் மாநிலங்களவை எம்பி சஞ்சீவ் அரோரா போட்டியிடுவார் என்று ஆம் ஆத்மியின் தேசிய பொதுச்செயலாளர் சந்தீப் பதக் தனது எக்ஸ் தள பதிவில் அறிவித்துள்ளார்.
சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் மாநிலங்களவை எம்பி சஞ்சீவ் அரோரா தேர்தலில் வெற்றி பெற்றால் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவ்வாறு மாநிலங்களவை எம்பி இடம் காலியானால் அந்த இடத்தில் ஆம் ஆத்மியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மாநிலங்களவைக்கு செல்ல ஏதுவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த மாத தொடக்கத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால் பஜா வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். எனவே மாநிலங்களவை எம்பி பதவியை பெறுவதற்காக எம்பி அரோராவை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட செய்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.