சென்னை: கீழடி அகழாய்வுகளில் வெளிப்பட்ட தமிழ் பண்பாட்டின் பெருமையை மறைக்கவும் புதைக்கவும் ஒன்றிய பா.ஜ. அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
இதுதொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மூத்த மொழியாம் தமிழுக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத்தந்த கலைஞர், 2016ம் ஆண்டிலேயே கீழடி ஆய்வுகளின் பெருமையை உலகத்தவர் அறிந்து கொள்ளும் வகையில் பதிவிட்டிருப்பதன் மூலம், வரலாற்றில் தமிழுக்கும் தமிழர்களுக்கும் உள்ள தனித்துவமான முக்கியத்துவத்தை உணர்த்தியிருக்கிறார். அதேவேளையில், நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று அப்போதே எச்சரித்தும் இருக்கிறார்.
கலைஞர் எச்சரித்தது போலவே, தமிழ் என்றால் கசப்புடனும், தமிழர்கள் என்றால் வெறுப்புடனும் பார்க்கக்கூடிய ஒன்றிய பா.ஜ. அரசு, கீழடி அகழாய்வுகளில் வெளிப்பட்ட தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை மறைக்கவும் புதைக்கவும் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இத்தனை ஆய்வுகள், அறிவியல்பூர்வமான முடிவுகள் கிடைக்கப்பெற்றும், கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிடாமல் காலந்தாழ்த்தி, தமிழரின் பண்பாட்டுப் பெருமையை மறைக்க நினைக்கும் ஒன்றிய பா.ஜ. அரசு, இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இரண்டாண்டுகள் கடந்த நிலையில், கூடுதல் சான்றுகள் தேவை என்று திருப்பியனுப்பி இருக்கிறது. இது தமிழ்ப் பண்பாட்டின் மீதான பா.ஜ. அரசின் அப்பட்டமான தாக்குதல்.
அகழாய்வுகள் நடத்தப்பட்டபோது அ.தி.மு.க. ஆட்சி நடந்தது. ஆனால், கீழடி அகழாய்வு முடிவுகளை ஏற்க மறுக்கும் ஒன்றிய பா.ஜ. அரசின் மொழிவெறி – இனவெறி நடவடிக்கை பற்றி அ.தி.மு.க. இதுவரை வாய் திறக்கவில்லை. அ.தி.மு.க.வை பா.ஜ.விடம் அடகுவைத்த பழனிசாமி எப்படி வாய் திறப்பார்? ஏற்கனவே அவருடைய அமைச்சரவையில் இருந்த ஒருவர், தமிழர் நாகரிகமான கீழடியை ‘பாரத நாகரிகம்‘ என்று பா.ஜ. மனம்குளிரும் வகையில் விளம்பியவராயிற்றே! இந்நிலையில், திமுக மாணவரணி மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி, கீழடி ஆய்வு முடிவுகளை ஒன்றிய அரசு ஏற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவைக் குழுத் தலைவருமான திருச்சி சிவா இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆற்றியுள்ள உணர்ச்சிமிகு எழுச்சியுரை, களம் நோக்கி பாயும் ஏவுகணைகளாக மாணவ பட்டாளத்தை ஆயத்தமாக்கியுள்ளது. மாணவப் பருவத்திலேயே கழகத்தில் ஒப்படைத்துக்கொண்டு, கழக மாணவரணிச் செயலாளராகவும் செயலாற்றியவராயிற்றே அவர். ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திட உதவிய மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன், மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி. உயர்நிலைச் செயல்திட்டக் குழு உறுப்பினர் பொன்.முத்துராமலிங்கம், ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட நிர்வாகிகள், மாணவரணிச் செயலாளர் சகோதரர் ராஜீவ் காந்தியுடன் துணை நின்ற மாநில, மாவட்ட மற்றும் அனைத்து நிலையிலுமான மாணவரணி நிர்வாகிகள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்!
தமிழர் நலனையும் தமிழின் பெருமையையும் காப்பதற்குக் கழகம் மேற்கொள்ளும் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக நிற்கும் கொள்கைவழிக் கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சிகளின் சார்பில் சென்னை சைதாப்பேட்டையில், கீழடி ஆய்வறிக்கையை ஒன்றிய பா.ஜ. அரசு புறக்கணிப்பதை கண்டித்து நடந்த போராட்டத்தில் திராவிடர் கழக தலைவர் வீரமணி, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தங்கபாலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணைத் தலைவர் எம்.அப்துல் ரகுமான், மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா, ம.தி.மு.க கொள்கை விளக்க அணிச் செயலாளர் வந்தியத்தேவன் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றி. கீழடியிலும் சென்னையிலும் ஒலித்திருப்பது முதல்கட்ட முழக்கம். இது டெல்லி வரை தொடர்ந்து எதிரொலிக்கும். தமிழரின் பண்பாட்டுப் பெருமையை நிலைநாட்டும் வரை கழகத்தின் போராட்டம் ஓயவே ஓயாது.