திருப்புவனம்: ஒன்றிய அரசின் தொல்லியல்துறை சென்னைப் பிரிவில் கண்காணிப்பாளராக பணியாற்றியவர் டாக்டர் அமர்நாத் ராமகிருஷ்ணன். இவரது தலைமையில், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே, கீழடியில் கடந்த 2014 முதல் 2016 வரை முதல் மற்றும் இரண்டாம் கட்ட அகழாய்வு நடத்தப்பட்டது. இதில், கிடைத்த பொருட்கள் மூலம், சங்க இலக்கியத்தில் கூறப்பட்ட தமிழரின் பண்டைய கால வாழ்வியலை, பல்வேறு சான்றுகள் மூலம் உலகறியச் செய்தார்.
இவரது இரண்டு கட்ட அகழாய்வு அறிக்கையை, ஒன்றிய அரசு இதுவரை வெளியிடாமல் தாமதித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் தொல்லியல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணன், ஒன்றிய அரசின் தொல்லியல் துறை இயக்குநராக பதவி உயர்வு பெற்று டெல்லி தலைமை அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த தகவலை ஒன்றிய அரசின் தொல்லியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.