கீவளூர் அஞ்சுவட்டத்தம்மன்
இறைவனே ஆனாலும் சரிதான், வதம் செய்தால் அதுவும் பாவம்தான். அப்படித்தான் சூரபத்மனை அழித்து வேறொரு உருவில் அவனைப் பெற்றாலும், ஏனோ ஒரு தவிப்பும் அமைதியின்மையும் கந்தனுக்குள் கொதித்தபடி இருந்தது. கீவளூர் எனும் இத்தலத்தைச் சுற்றிலுமுள்ள ஐந்து தலங்களிலும் பஞ்சலிங்க மூர்த்திகளை பூஜித்துவிட்டு, இறுதியில் இத்தலத்திலுள்ள கேடிலியப்பரை பூஜிக்கத் தொடங்கினார். அப்போதுதான் பார்வதி அன்னை காளியின் அம்சத்தோடு அஞ்சேல் என்று வானம் முழுவதும் அடைத்துக்கொண்டு ஆசிர்வதித்தாள். குழம்பிப் போயிருந்த கந்தனின் நெஞ்சம் அன்னையின் தரிசனத்தில் தெளிந்தது. அன்றுமுதல் இந்த அம்மனை அஞ்சுவட்டத்தம்மன் என்றழைத்தனர். கலங்கி நின்றோரை கரையேற்றும் முக்தி தேவி இவள். நிம்மதி வேண்டும் என்பவர்கள் இத்தலம் நின்று சென்றாலே போதும். திருவாரூர் – நாகப்பட்டினம் வழியில் 12 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
மணலூர் ஏழுலோகநாயகி
மணலூரிலுள்ள அந்த தாமரைக்குளம் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. கரையில் அமர்ந்து ஏதேதோ குடும்பக் கவலையில் மூழ்கியவர்களுக்கு சட்டென்று தீர்வு கிடைத்தது. இரவு நேரங்களிலும், மனித நடமாட்டம் இல்லாத காலங்களிலும் சிறிய பெண்ணொருத்தி காலில் கொலுசு கட்டிக்கொண்டு ஓடுவதுபோன்று ஓசை நீரில் கேட்டபடி இருந்தது. முதலில் நம்முடைய பிரமைதான் என்று நினைத்தவர்கள், உள்ளுக்குள் சக்தி வீற்றிருக்கிறாள். அவள் வெளிப்பட விரும்புகிறாள் என்று விஷயம் தெரிந்தவர்கள் சற்று உரத்துச் சொன்னார்கள். நீருக்குள்ளேயே மெல்லிய வெளிச்சம் பூசியதுபோன்ற ஒரு இடத்தில் அகிலமனைத்தும் காக்கும் அம்பிகை சிலை வடிவில் மெல்லிய புன்முறுவல் பூத்த முகத்தோடு காட்சி தந்தாள். தலையில் மெல்லிய ரத்தக் கசிவை பார்த்த பக்தர்கள் மிரண்டனர். நீரைக் குடைந்து நீந்தியவர்கள் அள்ளி எடுத்து சிலையை கரை சேர்த்தனர். எங்கிருந்தோ ஒரு குரல் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. ‘‘என்னை ஊரின் வடக்கு நோக்கி எடுத்துச் செல்லுங்கள். உரல் உலக்கை சத்தம் இல்லாத இடத்தில் என்னை அமர்த்துங்கள். நான் எப்போதும் உங்களை காப்பேன்‘‘ என்று மட்டும் ஆணையிட்டாள். கிராமத்தின் எல்லையை தாண்டும்போது காடு போன்ற ஓரிடத்தில் உரல், உலக்கை என மனிதர்களின் உபயோகமில்லாத இடத்தில் சிலையை இறக்கினர். அங்கேயே சிறு கோயிலாக கட்டினர். பிராம்மி, மாஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, மாஹேந்திரி, சாமுண்டா என்று அழைக்கப்படும் சப்த மாதர்களின் ஒன்று சேர்ந்த உருவமே ஏழுலோகநாயகி ஆகும். அபிஷேகத்தின்போது அந்த நெடிய சிலையின் மீது வழியும் பாலபிஷேகம் காண கண்கோடி வேண்டும். சக்தியின் லீலைகளை காண விரும்புபவர்களும், சக்தி வழிபாட்டை மேற்கொள்ளும் உபாசகர்களுக்கும் இக்கோயில் ஒரு தவக்குகை. கும்பகோணம் – மயிலாடுதுறை பாதையில் ஆடுதுறையிலிருந்து 4 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. சூரியனார் கோயிலுக்குச் சென்று வருபவர்கள் அருகிலுள்ள இக்கோயிலையும் தரிசிக்கலாம்.
மத்தூர் மகிஷாசுரமர்த்தினி
மகிஷாசுரனை பராசக்தி வதம் செய்ய எடுத்த கோலம்தான் மகிஷாசுரமர்த்தினி எனப்படுகிறது. அர்ச்சுனன் துர்க்கையை வணங்கித்தான் போரில் வெற்றி பெற்றதாக கூறுவர். இப்படி பல்வேறு தலங்களில் பல்வேறு கோலங்களில் அருள்கிறாள். அதில் சிறப்பு வாய்ந்ததாக மத்தூர் மகிஷாசுரமர்த்தினி விளங்குகிறது. ரயில் பாதைக்காக தோண்டிய பள்ளத்திலிருந்து சட்டென்று வெளிப்பட்டாள். மண்ணை அகற்றி பார்த்தபோது அதியற்புதமான அஷ்டபுஜங்களோடு எவ்வித சிதைவுமின்றி மேலெழுந்தாள். ஏழடி உயரத்தில் எழிற் கோலம் காட்டினாள். எண் கரங்களிலும் ஆயுதங்கள் ஏந்தியிருந்தாலும் திருமுகம் என்னவோ சாந்தமாக ஜொலிக்கிறது. செவ்வாய், வெள்ளி, ஞாயிற்று கிழமைகளில் ராகுகால சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. பௌர்ணமி நாட்களில் 108 பால்குட அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகளும் நடத்தப்படுகின்றன. திருத்தணி – திருப்பதி சாலையில் திருத்தணியிலிருந்து 8 கி.மீ.
தூரத்தில் பொன்பாடி ரயில் நிலையத்திற்கு மேற்கே 2 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.