கூடுவாஞ்சேரி: காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் கீரப்பாக்கம் ஊராட்சியில் கீரப்பாக்கம், முருகமங்கலம், அருங்கால் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில், கீரப்பாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி உள்ளது. இங்கு அரசு சார்பில் தலைமை ஆசிரியர், துணை தலைமை ஆசிரியர் உட்பட 10 ஆசிரியர் ஆசிரியைகளும், தனியார் சார்பில் 3 ஆசிரியைகளும் பணியாற்றி வருகின்றனர். இதில், 360க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில், 300க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் மாணவர்கள், 100க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்கள், 300க்கும் மேற்பட்ட கல்லுடைக்கும் தொழிலாளர் குடும்பத்தினரின் குழந்தைகள் படித்து பயன்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்த பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி பொதுமக்கள் சார்பில் கடந்த 8 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இந்த பள்ளியில் 8ம் வகுப்பு படித்துவிட்டு மேற்படிப்பு தொடர வேண்டும் என்றால் 10 கிலோ மீட்டர் தூரம் உள்ள கூடுவாஞ்சேரி மற்றும் ஊரப்பாக்கம், மாம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு சென்று படிக்கவேண்டிய அவலநிலை உள்ளது. மேலும், இப்பகுதியில் சாலை மற்றும் பேருந்து வசதியும் கிடையாது. இதனால் மாணவ, மாணவிகள் பல்வேறு பகுதிகளுக்கு சிரமத்துடன் சென்று படித்து வருகின்றனர்.
மழை காலங்களில் கடும் அவதிப்படுகின்றனர். இந்த பகுதியில் காட்டுப்பகுதி உள்ளதால் சாலையில் நடந்து செல்ல மாணவ, மாணவிகள் அச்சப்படுகின்றனர். சாலை மற்றும் பேருந்து வசதி இல்லாததால் பலர் 8ம் வகுப்புடன் படிப்பை பாதியில் நிறுத்திவிடுகின்றனர். இதனால், மேற்படிப்பு தொடர முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். இதற்காக ஊராட்சி மன்றம் சார்பில் 5 ஏக்கர் நிலத்தினை இடம் ஒதுக்கியும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.1லட்சம் நிதியும் கடந்த 2017ம் ஆண்டு செங்கல்பட்டில் உள்ள சார்நிலை கருவூலத்தில் செலுத்தியுள்ளனர். ஆனாலும் மேற்படி நடுநிலை பள்ளி இன்னும் உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்படவில்லை.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கீரப்பாக்கத்தில் அரசு பள்ளி தரம் உயர்த்த கருவூலத்தில் பணம் கட்டி 8 ஆண்டு ஆகியும் கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகத்தால் மாணவர்கள் இடை விலகளுக்கு ஆளாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
* இடிந்து விழும் நிலையில் பள்ளி கட்டிடம்
கடந்த 65 ஆண்டுகளுக்கு முன்பு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. தற்போது, இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதில், மழைக்காலங்களில் கட்டிடம் முழுவதும் மழைநீர் ஊற்றுவதால் படிக்க முடியாமல் பள்ளி குழந்தைகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதில், எந்த நேரத்தில் இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில், பழமை வாய்ந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்காக ரூ.99 லட்சத்து 60 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு 19 மாதம் ஆகியும், இதுகுறித்து பள்ளி நிர்வாக சார்பில் வலியுறுத்தியும் மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
* 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு
கீரப்பாக்கத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி பல்வேறு வசதிகள் இருந்தும் விளையாட்டு திடல் இல்லை. எனவே, நடுநிலை பள்ளி வளாகத்தில் இருந்து 200 மீட்டர் அருகிலேயே இட வசதி தாராளமாக உள்ள சர்வே எண் 43/1-ல் புஞ்சை அனாதீனம் வகைப்பாடு கொண்ட 5 ஏக்கர் அரசுக்கு சொந்தமான நிலத்தினை உயர்நிலை அல்லது மேல்நிலை பள்ளி கட்டுவதற்காக பொதுமக்கள் சார்பில் இடம் ஒதுக்கி கொடுக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது.