டெல்லி : கீழடி அகழாய்வு ஆய்வறிக்கையை திருப்பி அனுப்பியதாக வெளியான தகவலுக்கு ஒன்றிய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் கடந்த 2013 முதல் 2016 வரை ஒன்றிய அரசின் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு நடந்தது. தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் இப்பணி நடந்தது. அகழாய்வின்போது 5,765க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த அரிய வகை பொருட்கள் கிடைத்தன. இதைத் தொடர்ந்து, முதல் மற்றும் 2ம் கட்ட கீழடி அகழாய்வு அறிக்கையை ஒன்றிய அரசிடம் கடந்த 2 ஆண்டுக்கு முன்னர் தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த அறிக்கையில் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் தேவையான விபரங்களுடன் திருத்தம் தேவை எனக் கூறி ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியது.
இது தொடர்பாக ஒன்றிய அரசு அளித்த விளக்கத்தில், “கீழடி ஆய்வு அறிக்கையை வெளியிடுவதில் இந்திய தொல்லியல் துறை ஆர்வம் காட்டவில்லை என்பது ஒரு கற்பனை கதை. தொல்லியல் நிபுணர்களின் பரிந்துரைப்படி ஆய்வறிக்கையில் சில திருத்தங்கள் செய்யும்படி மட்டுமே கோரினோம். இது தொடர்பாக ஆய்வாளருக்கு தொல்லியல் துறை இயக்குனர் கடிதம் எழுதினார். ஆனால், தொல்லியல்துறை இயக்குநர் அறிவுறுத்திய திருத்தங்களை ஆய்வாளர் இதுவரை செய்யவில்லை. கீழடி தொடர்பான செய்திகளை முழு ஆய்வுக்குப் பிறகு வெளியிட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கிறோம். கீழடி விவகாரத்தில் ஒன்றிய கலாச்சார அமைச்சகத்தை மோசமாக சித்தரிக்க முயற்சி நடக்கிறது.”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.