ருத்ரபிரயாக்: உத்தரகாண்டில் கேதர்நாத்துக்கு பக்தர்கள் சென்ற தனியார் ஹெலிகாப்டர் அவசரமாக நடுரோட்டில் தரையிறக்கப்பட்டது. இதில் கார் சேதம் அடைந்தது. உத்தரகாண்டில் படாசு தளத்தில் இருந்து கேதர்நாத்திற்கு செல்ல பக்தர்களுடன் ஹெலிகாப்டர் ஒன்று நேற்று புறப்பட்டுச்சென்றது. இதில் விமானி ஆர்பிஎஸ் சோதி உட்பட 6 பேர் பயணம் செய்தனர். ஹெலிகாப்டர் புறப்பட்டுச்சென்ற சிறிது நேரத்தில் அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டறிந்தார். இதனையடுத்து அவர் ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதனால் விமானி ஹெலிகாப்டரை ருத்ரபிரயாக் மாவட்டத்தில் சிர்சி அருகே உள்ள நெடுஞ்சாலையில் தரையிறக்கினார். இதில் சாலையில் நின்ற கார் மற்றும் சாலையோரம் இருந்த வீடுகள் சேதம் அடைந்தன. ஹெலிகாப்டரின் வால் பகுதி காரின் மேல் விழுந்தது. இதில் விமானிக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக மீட்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹெலிகாப்டர் விபத்து குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. ஹெலிகாப்டரின் வால் பகுதி மோதியதால் கார் ஒன்று சேதமடைந்துள்ளது. நெடுஞ்சாலையில் நிற்கும் ஹெலிகாப்டரை அகற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.