திருப்பத்தூர்: தேர்தல் பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்களை மறைத்த விவகாரத்தில், மாஜி அமைச்சர் கே.சி.வீரமணி மீதான வழக்கை டிசம்பர் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தும், அவரை நேரில் ஆஜராகவும் திருப்பத்தூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி 3வது முறையாக போட்டியிட்டார். இதில் அவர் தோல்வியடைந்த நிலையில், தேர்தல் பிரமாணப்பத்திரத்தில் சொத்து விவரங்களை மறைத்து தவறான தகவல்களை தெரிவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இதுபற்றி வேலூரை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் மனுவின்படி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஜோலார்பேட்டை சட்டப்பேரவை தேர்தல் அலுவலர் திருப்பத்தூர் கோர்ட்டில் பல்வேறு ஆவணங்களை சமர்ப்பித்தார். அதன்படி திருப்பத்தூர் கோர்ட் ஜேஎம் 1ல் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கே.சி.வீரமணியை நேற்று நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அடுத்த விசாரணையை டிசம்பர் 17க்கு ஒத்திவைத்து அன்றைய தினம் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.