Wednesday, June 18, 2025
Home ஆன்மிகம் காவிய பாவலர்

காவிய பாவலர்

by Porselvi

பகுதி 2

சென்ற இதழில், “ராம நாமத்தின் மகிமைக்கு ஒரு சான்று நீதான். உனக்கு நான் ராமாவதாரத்தை உபதேசிக்கிறேன்.” என்று சொல்லத் துவங்கினார். ராமரின் ஜனனம் முதல் பட்டாபிஷேகம் வரையிலும், காட்சிகளாக வால்மீகியின் மனத்திரையில் வந்தது. வால்மீகியின் சந்தோஷத்திற்கு அளவேயில்லை. “ராமன் எவ்வளவு அருமையானவன் இப்படி எல்லா கல்யாண குணங்களும் ஒன்றிணைந்த ஒருவர் இருக்கக் கூடுமா!” என்று வால்மீகி வியந்தார். “ராம நாமத்தின் மகிமை இன்னமும் இருக்கிறது. வால்மீகி! நீ கூடிய விரைவில் உணரும் காலம் வரும்.” என்றுகூறி நாரதர் வாழ்த்தி மறைந்தார்.

முன்னிலும் அதிகமாக ராம நாமத்தை ஜபித்தபடியே வால்மீகியின் வாழ்நாள் நகர்ந்தது. ராம நாமம் எனும் உலகத்துக்குள்தான் வால்மீகி வாழ்ந்தார். ராம நாமம் அவர் மூச்சாக மாறிப்போனது. என்பது வரை பார்த்தோம்… இனி…

ஒரு நாள் வால்மீகி தனது சீடர்களுடன் தமசா நதிக்கு நீராடச் சென்றார். அவர் மனதில் ராமாவதார காட்சிகளே ஓடிக் கொண்டிருந்தன. தமஸா நதியைப் பார்த்த வால்மீகி முனிவர், “இந்த ஜலம் எவ்வளவு தெளிவாக இருக்கிறது பார். நல்ல மனிதர்களுடைய மனதைப் போல…” என்று கூறியபடி சுற்றியுள்ள மரங்கள், பூக்கள், பரந்த வானம் என இயற்கை அழகைக் கண்டு உளம் மகிழ்ந்தார்.

ஒரு மரத்தின் கிளை, அந்த நதியைத் தொட்டுக் கொண்டிருந்தது. அந்தக் கிளையில் ஒரு ஆண் – பெண் கிரௌஞ்ச ஜோடி பறவைகள் உல்லாசமாய் இருந்ததைக் கண்டார். பறவை ஜோடியில், ஆண் பறவையின் மேல், ஒரு வேடன் அம்பை எய்தான்னான். சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்த அந்த ஆண் பறவை அடிபட்டு கீழே விழுந்தது. வலியில் துடிதுடித்தது. சில வினாடியில் உயிர் நீத்தது. சிறிது நேரத்திற்கு முன்பு வரை, தன்னுடன் மகிழ்வுடன் இருந்த ஆண் பறவையின் இறப்பு, தன் கண்முன்னேயே நடந்ததை பெண் பறவையால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அலறித் துடித்தது. கதறியது. தன்முன் நிகழ்ந்த ஒரு சிறு பறவையின் மரணம், உண்மையான ஞானியைக் கலங்கச் செய்துவிடும். அந்த ஒரு நொடிப்பொழுது போதும், ஒரு ஞானியை, ஒரு யோகியை இந்தப் பிரபஞ்சம் உருவாக்கிவிடும். வால்மீகி முனிவருக்கும் அந்த நிகழ்வைப் பார்த்ததும் ஒரு மாற்றம் நேர்ந்தது. தன்னுள் ஏற்பட்ட சோகத்தையும், ஆற்றாமையையும் வெளிப்படுத்த எண்ணினார். அம்பை எய்த வேடனைப் பார்த்து, தன்னையும் அறியாமல், அவர்;

“மா நிஷாத! பிரதிஷ்டாம்ப்த மகம: சாஸ்வதீ: ஸமா:
யத் கிரௌஞ்ச மிதுநாத் ஏகமவதீ: காம மோஹிதம்”

வடமொழியில் ஒரு செய்யுள் போல உரைத்தார். அதன் பொருள்:
“ஹே வேடனே! கிரௌஞ்ச பட்சிகள் சந்தோஷமாக இருக்கும்போது, சிறிதும் இரக்கமின்றி அம்பை எய்து, கொன்று விட்டாயே? நீ வெகு காலம் இருக்கமாட்டாய்…”, என்று அந்த வேடனைப் பார்த்து சபிப்பது போல வார்த்தைகள் செய்யுளாக அமைந்து விட்டது. அது வால்மீகி வாக்கிலிருந்து முதன்முதலில் வெளிப்பட்ட செய்யுள்.

வால்மீகி முனிவருக்கு, தான் அனுபவித்த சோகம் ஒருபுறம் இருக்க, தான் ஒரு செய்யுளை இயற்றியது ஆச்சரியத்தை அளித்தது. தனக்கு இதற்கு முன் இது போன்று எதுவும் தோன்றியதில்லையே என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். உடன் வந்த சீடர்களும் அதை உணர்ந்தார்கள். வானிலிருந்த தேவர்கள் வால்மீகி முனிவரின் வாக்கிலிருந்து முதல் முதலாக வந்த அந்த ஸ்லோகத்தின் உள் அர்த்தத்தை தங்களுக்குள் வியந்து பாராட்டிக் கொண்டார்கள்.

“…மா’’ என்றால் லட்சுமி தேவி. ‘மா நிஷாத’ என்றால் லட்சுமி தேவியின் கணவர். அதாவது, மகாவிஷ்ணு கிரௌஞ்ச என்றால், ராட்சசன் என்று ஒரு பொருள். ‘ராக்ஷஸ தம்பதிகளிலே, மண்டோதரி புலம்பும்படி ராவணனை வதம் செய்து, உலகுக்கெல்லாம் நன்மை செய்த, ஹே ராமா!… `சாஸ்வதி ஸமா: பிரதிஷ்டாம் த்வம்’, என்றால் ‘பல்லாண்டு பல்லாண்டு வாழ்க!’… எனும்படி ஒரு பொருள் இருக்கிறது…”, என்றபடி வியந்தார்கள்.

வால்மீகி முனிவர், ராம சரிதத்தையும், தாமச நதிக்கரையில் தனக்கு நேர்ந்த அனுபவத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக நினைத்தபடி ஆசிரமத்திற்குள் நுழைந்தார். ஆசிரமத்தின் வாயிலில் இருந்த பாரிஜாத மரம் மகிழ்ந்து வால்மீகியின் மேல் பூக்களைச் சொரிந்தது. மரத்தின் அடியில் அமர்ந்தபடி, கண்களை மூடி ‘ராமா ராமா’ என தியானிதார். அடுத்த கணமே பிரம்ம தேவர் வால்மீகியின் முன் தோன்றினார்.

பல்லாயிரம் வருடங்கள் தவமிருந்தாலும் கிட்டாத பிரம்மனின் தரிசனம், இன்று தனக்குக் கிட்டியது ராம நாம ஜபத்தின் மகிமை என்று வால்மீகிக்கு புரிந்தது. பிரம்ம தேவரைப் பார்த்தவுடனே, வால்மீகி முனிவர் பயபக்தியுடன் அவரை நமஸ்கரித்தார். பிரம்ம தேவர் மிகவும் சந்தோஷம் அடைந்து, வால்மீகி முனிவரை அருகே உட்காரப் பணித்தார். வால்மீகி முனிவர் பணிவுடன் பிரம்மன் அருகில் அமர்ந்தார். ஞானிகளுக்கு, அருகில் இருப்பவரின் மன ஓட்டம் எளிதில் தெரியவரும். பிரம்மனுக்கு வால்மீகியின் மனதில் ஓடிக் கொண்டிருந்த செய்யுள் பிரம்மனுக்கு கேட்டது.

“உனது முதல் ஸ்லோகம்! யாமே

சரஸ்வதி தேவியை உம் வாக்கிலே தோன்றி, இயற்ற வைத்தோம். ஸ்லோகம் எழுதிவிட்டு, சோகம் எதற்கு? இப்பொழுது நீவிர் செய்ய வேண்டிய ஒரே பணி, நாரதர் உம்மிடம் சொன்ன ராம சரித்திரத்தை விஸ்தாரமாக, ஒரு காவியமாக எழுத வேண்டியதுதான்” என்று ஆசி கூறினார். வால்மீகி உள்ளம் நெகிழ்ந்தார். இக்காட்சியைக் கண்ட பாரிஜாத மரம் சிலிர்த்துக் கொண்டது.
பிரம்மன் தொடர்ந்தார்.

“ஸ்ரீராம சரித்திரத்தில் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும், உனது யோக சக்தியினால் உனக்குத் தெரியும். ராமனும் சீதாவும் பேசிக் கொண்டது முதல் அனுமனின் பராக்கிரமம் வரையிலும், ஒவ்வொருவரின் மன ஓட்டங்களும், அனைத்து நிகழ்வுகளும், காட்சிகளாய் விரிவடையும். இனி நடக்கவிருக்கும் நிகழ்வுகளும் உமக்குத் தெரிந்திருக்கும். நீ எழுதப் போகும் காவியம், பஞ்ச பூதங்கள் இருக்கும் வரையிலும் நிலைத்து நிற்கும். பிரபஞ்சம் உள்ள மட்டும் பாவலரான நீர் எழுதும் காவியம் ஆதி காவியமாக போற்றப்படும். இனி ராமாயணத்தை எழுத விரும்புபவர்களும் உன்னுடைய காவியத்தை ஒட்டியே எழுதுவார்கள். இப்பொழுதே எழுதத் தொடங்கவும்!” எனக் கூறி ஓலைச் சுவடிகளையும் எழுதுகோலையும் அளித்தார்.

உடனேயே வால்மீகி, பாரிஜாத மரத்தின் அடியில் தர்ப்பைப் புல் ஆசனம்

இட்டார். கிழக்கு நோக்கி அமர்ந்தார். எழுதத் தொடங்கினார். வார்த்தைகள் வரக் காத்திருக்காமல், செய்யுள்களை இயற்றினார். ஆறு காண்டங்கள் எழுதி முடித்து, பிரம்மன் கூறியது போல் நடக்க இருக்கும் ஏழாவது உத்ர காண்டமும் இயற்றி முடித்தார்.பாரிஜாத மரம் பெருமையுடனும், தாயின் வாஞ்சையுடனும் வால்மீகியை ஆசீர்வதித்தது. ரத்னாகராக இருந்த தான் வால்மீகியாக மாறிய அந்த நாளின் காலையில், தன் தாய் ஆசீர்வதித்தது நினைவுக்கு வந்தது. பாரிஜாத மரத்தின் நெகிழ்வில், தாயின் பரிவை உணர்ந்து, நமஸ்கரித்தார். பாரிஜாத மரம் பேசத் துவங்கியது;

“தேவரிஷிகளில் நான் நாரதராக இருக்கிறேன் என்று நாராயணனே சொல்லியிருக்கிறார். அப்படிப்பட்ட நாரதரே உனக்கு ராம சரித்திரத்தை உபதேசித்திருக்கிறார். நீ எழுதிய ராமாயணத்தின் முதல் ஸ்லோகத்தில், நாரத பகவானை குறித்து, நீ எழுதி இருப்பது உன் குரு பக்தியைக் காட்டுகிறது.

தபஸ்ஸ்வாத் யாயநிரதம் தபஸ்வீ வாக்விதாம் வரம்
நாரதம் பரிபப்ரச் சவால்மீகிர்முனிபுங்கவம்1

‘தவசீலரும் நாராயணன் இடத்தில் பக்தி கொண்டவரும் ராம சரிதத்தை மிக அழகாக உனக்கு எடுத்துரைத்தவருமான நாரதர்’ என நீ குறிப்பிட்டு இருப்பது எவ்வளவு பொருத்தம்!“எல்லாம் குருவின் அருள்! ராமனின் அருள்!”“வேதத்தின் பரம்பொருள் ராமன். வேதம்தான் உன் வழியே ராமாயணமாக உதித்துள்ளது வேதம்தான் ராமாயணம். ராமாயணம்தான் வேதம். இரண்டும் வேறு வேறல்ல.

வேதத்தின் உச்சமான, காயத்ரி மந்திரத்தில் 24 அட்சரங்கள் உண்டு. நீ, காயத்ரி மந்திரத்தின் ஒவ்வொரு அட்சரத்தையும் உன் ராமாயணத்தின் ஒவ்வொரு ஆயிரம் செய்யுளின் முதல் அட்சரமாக வடித்தது, எவ்வளவு அருமை!!”“கள்வனாய் இருந்த நான், இந்த நிலைக்கு உயர ஒரே காரணம் ராம நாம ஜெபமே!”

“ராம! ராம! எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற் போல், “சீதாயா: சரிதம் மஹத்’’ என்ற சொற்றொடர்தான். ராமாயணம் என்பதே சீதையின் சரித்திரம் என்று நீ கொண்டாடி இருப்பது எல்லோருக்கும் மகிழ்ச்சியை அளிக்கும். சீதையின் சரித்திரத்தைப் படிப்பவர்கள், கேட்பவர்கள், நினைப்பவர்கள் என எல்லோருக்கும் சீதாராமனின் ஆசி என்றும் உண்டு”வால்மீகி, ஆனந்தக் கண்ணீர் பொங்க பாரிஜாத மரத்தை மீண்டும் வணங்கினார். எல்லாவற்றையும் உணர்ந்த வருணனுக்கு மனம் நிறைந்தது. மெல்லிய தூறல் வீசியது. மழைச் சாரலும் பாரிஜாத மலர்களின் வாசமும் வால்மீகியைச் சூழ்ந்தது.

கோதண்டராமன்

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi