டெல்லி: டெல்லி அரசின் மதுபான கொள்கை வழக்கில் பி.ஆர்.எஸ். நிர்வாகி கவிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. டெல்லி புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 15ம் தேதி தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர்ராவின் மகள் கவிதா அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் இதே விவகாரத்தில் சிபிஐ தரப்பிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதையடுத்து மதுபானக் கொள்கை தொடர்பான விவகாரத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகிய விசாரணை அமைப்புகள் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று எம்.எல்.சி.கவிதா தாக்கல் செய்திருந்த வழக்கில், சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அமலாக்கத்துறை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் கடந்த 20ம் தேதி ஒருநாள் அவகாசம் வழங்கிய உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் கவிதாவின் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது; பி.ஆர்.எஸ். நிர்வாகி கவிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அரசு தரப்பு வாதத்தை நிராகரித்து கவிதாவுக்கு ஜாமீன் வழங்கியது. கவிதாவுக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு வழக்கறிஞர் கடுமையாக ஆட்சேபம் செய்தபோதும் அதை நிராகரித்து ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ நேர்மையாக விசாரணை நடத்துகிறதா?, வழக்கில் தொடர்புடையவர்களில் சிலரை மட்டும் குற்றவாளிகளாக்கிவிட்டு மற்றவர்களை அரசு தரப்பு சாட்சியாக சேர்ப்பது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.
விசாரணை என்ற பெயரில் ஒருவருக்கு தண்டனை வழங்குவதை ஏற்க முடியாது. ஏற்கனவே பிணையை வழங்க மறுத்த தனி நீதிபதி, தவறான வழிமுறையை கையாண்டிருக்கிறார். பெண்களுக்கென சில சலுகைகள் இருப்பதை தனி நீதிபதி கவனிக்க தவறிவிட்டார் என்றும் கூறியுள்ளனர்.