புதுடெல்லி: டெல்லி புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 15ம் தேதி தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதா அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இதே விவகாரத்தில் சிபிஐ தரப்பிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கவிதாவின் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ராஜூ நீதிபதிகள் முன்னிலையில் ஒரு கோரிக்கை வைத்தார். அதில்,‘‘கவிதா வழக்கு விவகாரத்தில் சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு விட்டது. ஆனால் அமலாக்கத்துறை தரப்பில் இன்னும் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை’’ என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘அமலாக்கத்துறை தரப்பு பதில் மனுவை வரும் வியாழக்கிழமைக்குள் தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டு, விசாரணையை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.