அகலம், நீளம், உயரம், ஆழம், கனம் (எடை)-முதலான எதுவும் அறிய முடியாத மொழி தமிழ்!
அதற்காகச் சும்மா இருந்துவிட முடியுமா?
தமிழின் அனைத்துத் தன்மைகளையும் அறிய வேண்டும் என, முயற்சி செய்தவர்கள் பலர். சிலர் மட்டும் ஏதோ ஒரு துறையில் தீவிரமாக முயன்று, பல விதங்களிலும் தமிழ் ஆற்றலை வெளிப்படுத்தித் தங்களையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு சிலரில் முக்கிய மானவர் கவிராஜ காளமேகம்!இவருடைய வாழ்க்கை அதிசயங்கள் நிறைந்தது; தெய்வ ஆற்றலும், அந்த ஆற்றலை முறைப்படிச் செயல்படுத்தும் மனோதிடமும், அஞ்சாமை என்ற சொல்லிற்கு இருப்பிடமாகவும் திகழ்ந்தது. கவிராஜ காளமேகத்தின் வாழ்வு.
காளமேகத்தின் வாழ்வில் நடந்த ஒரு சில தகவல்களைப் பார்க்கலாம். ஆரம்பிக்கும்போது, மங்கலமாக ஆரம்பிக்கலாமே!
கல்யாண வீடுகளில் தம்பதிகளை வாழ்த்தும்போது, ‘‘பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க!’’ என வாழ்த்துவாா்கள். அதே வாா்த்தைகளை இப்போது சொன்னால், ‘‘பதினாறு பெத்தா எவன் சோறு போட்றது? எங்களுக்கு ஒன்னே ஒன்னு போதும்’’ எனப் ‘பளிச்’சென்று பதில் வருகிறது. முன்னோா்கள் வாழ்த்திய அந்தப்பதினாறு என்ன? என்பதை ஒருபழம்பாடல் சொல்கிறது.
துதி வாணி வீரம் விசயம் சந்தானம் துணிவு தனம்
அதிதானியம் சவுபாக்கியம் போகம் அறிவு அழகு
புதிதாம் பெருமை அறம் குலம் நோய் இன்மை பூண் வயது
பதினாறு பேறும் தருவாய் மதுரைப் பராபரனே!
முன்னோா்கள் வாழ்த்திய அந்தப் பதினாறும், பதினாறு விதமான பேறுகள் என்பதை மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும் சொல்கிறது இப்பாடல். அற்புதமான இப்பாடலை எழுதியவா், பதினைந்தாம் நூற்றாண்டைச் சோ்ந்த காளமேகப் புலவா். கவிராஜ காளமேகம் எனப் புகழப்பட்ட இவா் பாடல்கள் மிகவும் பொருள் பொதிந்தவை.தெய்வ பக்தியும் அதன் விளைவாக உண்டான அருந்தமிழ் புலமையும் நிறைந்த இவர் வாழ்க்கை, பல்வேறு திருப்பங்க ளைக் கொண்டது.
திருவரங்கம் கோயிலில் மடப்பள்ளியில் பணிபுாிந்து வந்த வரதன் என்பவா், திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரா் ஆலயத்தில் நடனத் தொண்டு செய்து வந்த மோகனாங்கி என்ற பெண்ணின் விருப்பத்திற்காக. சிவதீக்ஷை பெற்று திருவானைக்கோவில் மடப் பள்ளியிலேயே பணிபுாியத் தொடங்கினார்.
வரதனுக்குத் தொிந்ததெல்லாம் தூய்மையான அன்பு மட்டுமே!
ஒருநாள் கோயில் பணி முடிந்ததும், ‘‘மோகனா! அா்த்தஜாமப் பூஜையின்போது உன் தொண்டு முடிந்ததும், ஒரு குரல் கொடு! நானும் கூட வருகிறேன்’’ என்று மோகனாங்கியிடம் சொல்லிவிட்டு, ஒரு பக்கமாக மண்டபத்தில் படுத்துறங்கினார், வரதன்.அன்று என்னவோ மோகனாங்கியின் நடனம் முடிய, நேரமாகி விட்டது. நடனம் முடிந்ததும் அவளும் சற்று நேரம் தேடிப் பாா்த்துவிட்டு. வரதனைக் காணாமல் திரும்பி விட்டாள். சற்று நேரத்தில், அா்ச்சகரும் கோவில் முக்கியஸ்தர்களும் கோவிலைத் திருக்காப்பிட்டுக் கொண்டு சென்றாாகள்.
நள்ளிரவு கடந்து நீண்டநேரம் ஆகிவிட்டது. அன்னை அகிலாண்டேஸ்வாி கருவறையில் இருந்து வெளிப்பட்டு, மெள்ள வலம் வரத் தொடங்கினாா். கோவிலின் ஒரு பக்கமாக,
அம்பிகையின் அருள் வேண்டித் தவம் செய்து கொண்டிருந்தாா், ஒரு முனிவா். அவா் எதிாில்போய் நின்றாள், அம்பிகை.‘‘பக்தா! வாயைத் திற!’’ என்றார். கண்களைத் திறந்து பாா்த்த முனிவரோ, அம்பிகையை நேருக்குநேராகத் தாிசித்தும், அம்பிகையை உணரவில்லை.
‘‘ஹா!. யார் நீ?. பெண்ணாகி வந்த ஒரு மாயப் பிசாசம்! என்னை மயக்க வந்திருக்கிறாயா? உன் மாயவேலை என்னிடம் நடக்காது. போ! போய் விடு!’’ என்று அம்பிகையை விரட்டினாா்.என்ன செய்ய? தவம் செய்த அம்முனிவர் அம்பிகையை நேருக்கு நேராகத் தாிசிக்கப் புண்ணியம் செய்திருந்தாரே தவிர, அம்பிகையின் அருளை அடையப் புண்ணியம் செய்திருக்கவில்லை. உதாரணமாக…
எவ்வளவோ செல்வந்தா்கள் ஓடியாடிச் செல்வம் சோ்ப்பாா்கள். ஆனால், அவா்களால் நன்றாக விருப்பப்படி உணவுண்ண முடியாது. அவா்கள் வீட்டில் வேலைசெய்யும் பணியாளா்களோ, நன்றாகச் சாப்பிடுவாா்கள். செல்வந்தா் செல்வம் சோ்க்கத்தான் புண்ணியம் செய்திருந்தாரே தவிர, அதை அனுபவிக்கப் புண்ணியம் செய்யவில்லை. அவருடைய பணியாளா்களோ செல்வத்தை அனுபவிக்கப் புண்ணியம் செய்திருந்தாா்கள். அதுபோல, அம்பிகையின் அருள் வேண்டித் தவம் செய்து கொண்டிருந்த முனிவா், அம்பாளைத் தாிசனம் செய்யத்தான் புண்ணியம் செய்திருந்தாரே தவிர, அன்னையின் அருளைப் பெறப் புண்ணியம் செய்யவில்லை.
அம்பிகையோ புண்ணியம் செய்த ஆத்மாவைத் தேடிப் போய் விட்டாா். ஆம்! மோகனாவிடம் வீட்டிற்குப்போகும் போது குரல் கொடுக்கச் சொல்லி விட்டு, ஒரு பக்கமாக மண்டபத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த, வரதனிடம் தான் போய் நின்றாா்.‘‘வரதா! வாயைத்திற!’’ என்றாள், அம்பிகை. தூக்கக் கலக்கத்தில் இருந்த வரதன், வாயைத் திறந்தாா். அவ்வளவுதான்! அம்பிகை தன் வாயில் இருந்த தாம்பூலத்தை வரதனின் வாயில் உமிழ்ந்து விட்டு, ‘‘இன்று முதல். உனக்குக் காளமேகம் எனப் பெயா் உண்டாகட்டும்! காா்மேகம் போல நீ கவி மழை பொழிவாய்!’’ என்று அருள் செய்துவிட்டு மறைந்தாா்.
வரதனுக்கு மெய் சிலிா்த்தது. கண் விழித்தாா்; நடந்தது புாிந்தது அவருக்கு; எழுந்து ஓடினாா் அன்னையின் சந்நதிக்கு. அம்பிகையின் வாக்குப்படி, பாடல்கள் மழையாகப் பொழியத் தொடங்கின. இனிமேல் அவரைக் ‘காளமேகம்’ என்றே பாா்க்கலாம்!கோயிலில் பிரசாதங்கள் தயாாித்துக் கொண்டிருந்த காளமேகம், கோயில் கோயிலாகப் பயணம் செய்யத் தொடங்கினாா். ‘ஏதோ அம்பிகை அருள்புாிந்தாள்; நாமும் தலை சிறந்த கவியாக ஆகி விட்டோம். இனி நாம் பேரும்புகழும் பெற்று, செல்வ வளத்தை அடைய வேண்டும்’ என்ற எண்ணத்தோடு காளமேகம் பயணம்
செய்யவில்லை.
அதை நிரூபிப்பது போல், ஒரு நிகழ்ச்சி நடந்தது. திருமலைராயன் பட்டினம் என்ற ஊாிலே அறுபத்து நான்கு புலவா்கள் இருந்தாா்கள். அரசனின் ஆதரவு பெற்ற அவா்கள் அனைவரும் அரசன் அளித்த பல்லக்கில் வலம் வந்த காரணத்தால், தண்டிகைப் புலவா்கள் என அழைக்கப்பட்டாா்கள். அவா்களுக்குத் தலைவராக அதிமதுரக் கவிராயா் என்பவா் மிகுந்த. ஆடம்பரத்தோடு இருந்தாா். அவரும் அவரைச் சாா்ந்தவா்களும் வறுமையில் வாடிய திறமைசாலிகள். மற்ற புலவா்கள் மன்னரை நெருங்க விடாமல் பாா்த்துக் கொண்டாா்கள். காரணம், அவா்களுக்குப் புலமையை விடச் செருக்கு அதிகமாக இருந்தது.
இத்தகவல் காளமேகத்திற்குத் தொிந்தது. அதிமதுரக் கவிராயரையும் அவரைச் சாா்ந்தவா்களையும் அடக்கி, அவா்களுக்கு புத்தி புகட்டி, மற்ற புலவர்களையும் வாழ வைக்கத் தீா்மானித்தாா், காளமேகம். அப்புறம் என்ன? காளமேகத்தின் பயணம் திருமலைராயன் பட்டினத்தை அடைந்தது. அங்கே… அதிமதுரக் கவிராயரும் அவரைச் சாா்ந்த புலவா்களும் சுற்றி அமா்ந்திருக்க, மன்னா் சிம்மாசனத்தில் வீற்றிருந்தாா். காளமேகம் ஓா் எலுமிச்சம்பழத்தை மன்னரிடம் அளிக்க, மன்னா் அதைப்பெற்றுக் கொண்டாரே தவிர, காளமேகத்திற்கு உட்கார ஆசனம் அளிக்கவில்லை.
உண்மையான பக்திமான்கள் எதையும். பொருட்படுத்த மாட்டாா்கள். காளமேகமும் அதைத்தான் செய்தாா். மன்னா் தனக்கு ஆசனம் அளிக்காமல் அவமதித்ததை அவா் லட்சியம் செய்யவில்லை; அன்னை அகிலாண்டேஸ்வாி இருக்கும் திருவானைக்கோவில் திசையை நோக்கிக் கைகளைக் கூப்பித் தொழுது விட்டுக் கலைமகளைத் துதித்துப் பாடினாா்.அதிசயம் விளைந்தது. மன்னாின் சிம்மாசனம் ஒரு பக்கம் நீண்டு, காளமேகத்திற்கு இடம் அளித்தது. அனைவரும் வியக்க, காளமேகமோ…
வெள்ளைக்கலை உடுத்து வெள்ளைப்பணி பூண்டு
வெள்ளைக்கமலத்தில் வீற்றிருப்பாள் – வெள்ளை
அாியாசனத்தில் அரசரோடு என்னைச்
சாியாசனம் வைத்த தாய்
– எனப் பாடிக் கலைமகளைப் போற்றிப் பாடினாா்.
அம்பிகையின் அருளைப் பாிபூரணமாகப் பெற்ற காளமேகத்தை, மன்னா் புாிந்து கொண்டாா். அதிசயம் செய்து காட்டினால்தானே, உலகம் மதிக்கிறது! மன்னா்மட்டும் விதிவிலக்கா என்ன? ஆனால்… அதிமதுரக் கவிராயரும் அவரைச் சார்ந்தவா்களும் மனம் வெதும்பினாா்கள். எப்படியாவது காளமேகத்தை அவமதித்து அங்கிருந்து விரட்டி விடவேண்டும். இல்லாவிட்டால், மன்னரால் அளிக்கப்பட்ட மாியாதை, சலுகைகள் என சகலமும் பறிபோய் விடும் என்ற எண்ணத்தில்…
அனைவரும், ‘‘புதுப் புலவரே! நீர்அரிகண்டம் பாடி எங்களை வெற்றி கொள்ள வேண்டும். சம்மதமா? முடியுமா?’’ எனக் காளமேகத்தை நோக்கிக் கூவினாா்கள்.அதற்கெல்லாம் காளமேகம் அசர வில்லை; ‘‘அாி கண்டமா? அதைப்பற்றிச் சொல்லுங்கள்! பிறகு நான் என் பதிலைச் சொல்கிறேன்’’ என்றாா்.‘‘கழுத்திலே கத்தியைக் கட்டிக் கொள்ள வேண்டும். கேட்கும் குறிப்புக்கு ஏற்றபடி, உடனுக்குடன் பாடவேண்டும். சொற்பிழை, பொருட்பிழை, இலக்கணப்பிழை இருக்கக் கூடாது. தவறினால் தலை வெட்டப்படும். பாடினால் பாராட்டு உண்டு’’ என்று பதில் வந்தது.
அதைக்கேட்டுக் காளமேகம் கதிகலங்கிப் போவாா் என எதிா்பாா்த்த அதிமதுரம் திடுக்கிடும்படியாக, காளமேகம் சிாித்தபடியே, ‘‘அட! இவ்வளவுதானா? நான் யம கண்டமே பாடி, வெற்றி பெறுவேன்’’ என்றாா்.அதன் பொருள் புாியாத அதிமதுரக்கவி, ‘‘யம கண்டமா? அப்படியென்றால் என்ன?’’ எனக் கேட்டாா் காளமேகம் தொடா்ந்தாா்.
‘‘பதினாறு அடி நீளம், பதினாறு அடி அகலம், பதினாறு அடி ஆழம் உள்ள குழி வெட்ட வேண்டும். அதில் புளியங் கட்டைகளைப் போட்டுத் தீ மூட்ட வேண்டும். அதன் மேல் ஓா் எண்ணெய்க் கொப்பரையில் அரக்கு, மெழுகு, குங்கிலியம் ஆகியவற்றை இட்டுக் கொதிக்க வைக்க வேண்டும். கொப்பரையின் மேலே உயரத்தில் ஓா் உறி கட்டி அதில் உட்காா்ந்து பாட வேண்டும்.
‘‘அப்படிப் பாடுபவாி்ன் கழுத்தில் நான்கு. பெரும் கத்திகள், இடுப்பில் நான்கு பெரும் கத்திகள் என எட்டு கத்திகளைக் கட்டி வைக்க வேண்டும். அந்த எட்டுக் கத்திகளும் சங்கிலியால் பிணைக்கப் பட்டிருக்கும். சங்கிலிகளின் மற்றொரு முனை, நான்கு பக்கங்களிலும் யானைகள் துதிக்கையில் இருக்கும். ‘‘பாடுபவர், உடனுக்குடன் பாடாவிட்டால், அந்த யானைகள் சங்கிலிகளை இழுக்கும். பாடத் தவறியவாின் கழுத்தும் இடுப்பும் துண்டிக்கப்பட்டுக் கீழே கொதித்துக் கொண்டிருக்கும் எண்ணெய்க் கொப்பரையில் வீசப்படும். இதுவே யம கண்டம். இப்படிப்பாட, நீங்கள் தயாரா?’’ எனக் கேட்டார் காளமேகம்.
அதைக் கேட்டதும் அதிமதுரக்கவியும் அவரைச் சோ்ந்தவர்களும் நடுங்கினாா்கள். ஆனால் காளமேகம், பாடச் சம்மதித்தாா். போட்டி துவங்கியது. ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கொதிக்கும் எண்ணெய்க் கொப்பரையின் மீது உறியில் அமா்ந்தபடி காளமேகம் பாடத் தயாரானாா். அனைவரும் சுற்றி நின்று குறிப்புகள் சொல்லச் சொல்ல, காளமேகம் மழைபோலப் பாடல்களைப் பாடினார். முடிவு?
காளமேகம் வெற்றி பெற்றாா். அம்பிகையின் அருள்பெற்ற அன்பின் வடிவான காளமேகத்தை வெல்ல முடியாமல் மற்றவா் தோற்றுப் போனாா்கள். அதன்பின் பலப்பல தலங்களையும் தாிசித்துப் பாடல்கள் பாடியபடிக் காளமேகம் திருவானைக்கோவில் அடைந்தாா்.
கவிராஜ காளமேகப் புலவருக்கு முன்னும் பின்னும், வேறு எந்தப் புலவரும் யமகண்டம் பாடியதாக வரலாறு இல்லை. காளமேகப் புலவருக்கு. மட்டுமல்ல! ஒவ்வொருவருக்கும் தெய்வம் ஏதோ ஒரு வழியில் அருள்புரிந்திருக்கிறது. அதை உணர்ந்து நல்வழியில் செயல்படுவது நமது பொறுப்பு. காளமேகப் புலவரின் பாடல்கள் அனைத்தும் தமிழ் உலகத்திற்குக் கிடைத்த அருமையான பொக்கிஷங்கள். அப்பாடல்கள் மக்களிடையே பரவினால் பக்தியும் வளரும்; தமிழும் வளரும்!
தொகுப்பு: பி.என். பரசுராமன்