சென்னை: இதய அறுவை சிகிச்சைக்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜி, காவேரி மருத்துவமனையில் இருந்து புழல் மத்திய சிறைக்கு நேற்று மாலை மாற்றப்பட்டார். நீதிமன்ற காவல் வரும் 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, போக்குவரத்து துறையில் ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
இதற்கிடையே உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 13ம் தேதி காலை முதல் நள்ளிரவு வரை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் வீடு மற்றும் அலுவலகம் என 18 மணிநேரம் சோதனை நடத்தினர். அதன் பிறகு, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்நிலையில் அப்போது, அவருக்கு ஏற்பட்ட ரத்த அழுத்தம் காரணமாக காரிலேயே நெஞ்சுவலியால் துடித்தார்.
இதையடுத்து செந்தில் பாலாஜியை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, செந்தில் பாலாஜியை ஆய்வு செய்த டாக்டர்கள் அவருக்கு இதயத்தில் நாளத்தில் 4 அடைப்புகள் இருப்பதை உறுதி செய்தனர். மேலும், செந்தில்பாலாஜிக்கு உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அமலாக்க துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். பின்னர், செந்தில் பாலாஜியை ரிமாண்ட் செய்ய வேண்டும் என்று அவர்கள் நீதிமன்றத்தில் முறையிட்டனர். அதன்படி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் செந்தில் பாலாஜியின் உடல் நிலையை நேரில் ஆய்வு செய்தார். அதன்பிறகு அவரை வரும் கடந்த 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
அதைதொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அதன் பிறகு கடந்த ஜூன் 21ம் தேதி செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்நிலையில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் 8 நாட்கள் அனுமதி அளித்தது. ஆனால் செந்தில் பாலாஜி ஐசியூ வார்டில் இருந்ததால் அமலாக்கத்துறை விசாரணை நடத்தவில்லை. மேலும், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 2முறை நீட்டிக்கப்பட்டு 3வதாக வரும் 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் தற்போது உள்ளார்.
இந்நிலையில், காவேரி மருத்துவமனையின் டாக்டர்கள் பரிந்துரைப்படி செந்தில் பாலாஜியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், அவரை டிஸ்சார்ஜ் செய்ய முடிவு செய்தனர். அதற்கான தகவலை காவல் துறைக்கு மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று மாலை 4.21 மணிக்கு காவேரி மருத்துவமனையில் இருந்து 108 ஆம்பூலன்சில் போலீசார் புழல் மத்திய சிறைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜியை அழைத்து சென்றனர். சிறைக்கு அழைத்து செல்வதற்கு முன்பு, காவேரி மருத்துவமனை சார்பில் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு வழங்க வேண்டிய மருந்துகள் குறித்த பட்டியலை போலீசாரிடம் அளித்தனர்.
அதை தொடர்ந்து செந்தில் பாலாஜி மாலை 5.30 மணிக்கு புழல் மத்திய சிறையில் உள்ள விசாரணை கைதிகள் சிறையில் அடைத்தனர். இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் செந்தில் பாலாஜியை சிறைத்துறை அதிகாரிகள் சிறை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பொதுவாக வருமான வரி கட்டும் நபர்கள் மற்றும் அரசியல் முக்கிய பிரமுகர்களுக்கு மத்திய சிறைகளில் முதல் வகுப்பு வழங்கப்படும். அதன்படி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் மத்திய சிறையில் முதல் வகுப்பு ஒதுக்கப்பட்டது.