Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கவரப்பேட்டை ரயில் விபத்து நாசவேலை தான் காரணம்: ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் அறிவிப்பு

புதுடெல்லி: திருவள்ளூர் அருகே கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் கவரப்பேட்டை அருகே கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி இரவு நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து ஜோலார்பேட்டை, அரக்கோணம், பெரம்பூர் கும்மிடிப்பூண்டி வழியாக பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுமார் 13 பெட்டிகள் வரை தடம்புரண்டது. 19 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்தில் 13 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்து குறித்து ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கவரப்பேட்டையில் பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்கு நாசவேலைதான் காரணம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தெற்கு மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம் சவுத்திரி நேற்று கூறுகையில்,’ பாக்மதி எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் மீது மோதியது எந்தவொரு உபகரணங்கள், சிக்னல்கள் திடீர் செயலிழப்பு காரணமாக அல்ல, மாறாக தண்டவாளத்தை மாற்றி அமைத்ததுதான் என்பது தெரிய வந்துள்ளது.

அதுவும் வலுக்கட்டாயமாக மாற்றியதால் தான் இந்த விபத்து நிகழ்ந்தது. குறிப்பாக தண்டவாள இடைப்பூட்டு அமைப்பின் கூறுகளை குற்றவாளிகள் வலுக்கட்டாயமாக அகற்றியதால் ஏற்பட்ட நாசவேலையின் விளைவாகும் என்று விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்த விபத்து நாசவேலை பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் பாக்மதி ரயிலின் லோகோ பைலட் அவசரகால பிரேக்குகளைப் பயன்படுத்துவதில் சிறந்த விழிப்புணர்வையும், உடனடித் தன்மையையும் காட்டினார். இது ரயிலின் வேகத்தையும் அதன் விளைவாக ஏற்பட்ட மோதலின் தாக்கத்தையும் குறைத்தது’ என் தெரிவித்தார்.

* சென்னை லோகோ பைலட் பெயர் ரயில்வே விருதுக்கு பரிந்துரை

பாக்மதி ரயிலை இயக்கிய சென்னை டிவிஷனை சேர்ந்த லோகோ பைலட் ஜி. சுப்ரமணி, அதி விசிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.