சேலம்: சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்தவர் முரளி (45). புதிய பஸ் நிலையம் அருகில் நகைக்கடை வைத்துள்ளார். இவர் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எனக்கு தெரிந்த தமிழழகன், பிரேமா, விக்னேஷ் ஆகியோர் வந்து, வங்கியில் வீட்டு பத்திரத்தை அடகு வைத்து கடன் வாங்கியுள்ளதாகவும், ரூ.1.21 கோடி கடனை அடைத்து விட்டால், அதன்பிறகு பணத்தை தந்து விடுவதாகவும் கூறினர்.
இதையடுத்து நான் கடனை அடைத்து, சொத்து பத்திரத்தை தமிழழகன் பெற்றுக்கொண்ட பிறகு, கடன் தொகையை தரவில்லை. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து, வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சேலம் தலைமையிடத்து துணை கமிஷனராக இருந்த கீதாவிடம் நீதிமன்ற உத்தரவை கொடுக்க வந்தேன். அப்போது அந்த அலுவலகத்தில் இருந்த எஸ்.எஸ்.ஐ. சரவணன், மனுவை வாங்கிக் கொண்டு நான் தான் இந்த வழக்கை விசாரிப்பேன் என கூறினார். பின்னர் தமிழழகன் தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி, வட்டியுடன் ரூ.1.50 கோடி வரும் நிலையில், ரூ.1.05 கோடி கொடுத்தால் போதும் என எழுதி வாங்கினார்.
இந்த ரூ.1.05 கோடியில் ரூ.25 லட்சத்தை தமிழழகன் கொடுத்தார். இதில் எஸ்.எஸ்.ஐ. சரவணன் ரூ. 6 லட்சத்தை கமிஷனாக பெற்றுக்கொண்டார். மேலும் ரூ.80 லட்சத்தை பெற்று தருவதாக கூறினார். தற்போது பணத்தை பெற்றுத்தர மறுத்து வருவதுடன், என்னை முழுவதுமாகவே ஏமாற்றிவிட்டார். எனவே புகார் கொடுக்க சென்ற என்னை தடுத்து, கமிஷன் பெற்றுக்கொண்டு ரூ.80 லட்சத்தை எதிர்தரப்பினருக்கு கிடைக்கும் வகையில் சாதகமாக நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை பெற்றுத்தர வேண்டும் என்றார்.
இதுதொடர்பாக எஸ்.எஸ்.ஐ. சரவணன் பணம் பெற்றதற்கான வீடியோ ஆதாரத்தையும் வெளியிட்டார். என் மீது மேல் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தால் சஸ்பெண்ட் செய்வார்கள். 4வது மாதம் வேலைக்கு வந்து விடுவேன் என எஸ்.எஸ்.ஐ. சரவணன் கூறும் வீடியோ காட்சியையும் வெளியிட்டார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.