கூடுவாஞ்சேரி: காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு ஊராட்சிகளில் நிதி ஆதாரம் இல்லாததால் மக்கள் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ளன. இதில் பல்வேறு ஊராட்சிகளில் போதிய நிதி ஆதாரங்கள் இல்லாததால் மக்கள் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், சாலை, கால்வாய், தெருவிளக்கு, குடிநீர் வசதி, மழை நீர் கால்வாய், தரைப்பாலம், சுற்றுச்சுவர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கடந்த 4 ஆண்டுகளாக அரசு சார்பில் நடத்தப்படும் முகாம்களிலும், கிராம சபை கூட்டங்களிலும் பொதுமக்கள் சார்பில் மனு கொடுத்தும் கீரப்பாக்கம், நல்லம்பாக்கம், வேங்கடமங்கலம், குமிழி, கல்வாய், ஊனைமஞ்சேரி, வண்டலூர், பெருமாட்டுநல்லூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் போதிய நிதி ஆதாரங்கள் இல்லாதால் பல்வேறு வசதிகள் செய்து தர முடியாமலும், தூய்மை பணியாளர்கள், குடிநீர் மற்றும் தெருவிளக்கு பராமரிப்பாளர்கள், அலுவலக பணியாளர்களுக்கு சம்பளம் தர முடியாமலும் ஊராட்சி நிர்வாகத்தினர் திணறி வருகின்றனர்.இதனால் மக்கள் பணி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிராம சபை கூட்டங்களில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும், பொதுமக்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது. மேலும் அரசு அறிவிக்கும் எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் ஒவ்வொரு ஊராட்சிகளிலும் போதிய நிதி ஆதாரம் இல்லாததால் நடவடிக்கை எடுக்க முடியாமல் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் மேற்படி பணிகளை செய்ய முடியாமல் கிடப்பில் போட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டங்களிலும், பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவாத நகலை எடுத்துச்சென்று அதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் காண்பித்து மனு கொடுத்து பல மாதங்களான நிலையில், இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.