செங்கல்பட்டு: காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு துணை தலைவராக திமுகவை சேர்ந்த இளங்கோவன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ளது. இதில், 24 ஒன்றிய குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வண்டலூர் பகுதி ஒன்றிய கவுன்சிலரும் காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளராக இருந்த ஆராமுதன், காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு துணை தலைவராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆராமுதனை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர். இதனால் காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு துணை தலைவர் பதவி காலியானதால் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
திமுக சார்பில் ரத்தினமங்கலம் திமுக ஒன்றிய கவுன்சிலரும் காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளருமான ஏவிஎம் இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். அவர் நேற்று காட்டாங்குளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் அலுவலர்கள் குமார், பாபு, கலைச்செல்வன், முன்னிலையில் துணைத்தலைவருக்கான தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்தார். இவரை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, திமுகவை சேர்ந்த ஏவிஎம் இளங்கோவன் காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு துணை தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக தேர்தல் அலுவலர்கள் அறிவித்தனர்.
ஒன்றிய குழு துணை தலைவராக வெற்றிபெற்ற ஏவிஎம் இளங்கோவனுக்கு காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆப்பூர் சந்தானம், வடக்கு ஒன்றிய செயலாளர் லோகநாதன், ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன் தலைமையில் சால்வை அணிவித்து மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்பு ஒன்றியத்தில் உள்ள அனைத்து திமுக, அதிமுக கவுன்சிலர்களும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஒன்றிய குழு துணை தலைவர் ஏவிஎம் இளங்கோவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து துணைத் தலைவராக இருந்து மக்கள் நலப் பணியில் ஈடுபடுவேன் என்று ஏவிஎம் இளங்கோவன் தெரிவித்தார். பின்னர், செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனனை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதில், ஒன்றிய கவுன்சிலர்கள் அருள் தேவி, சங்கமித்திரை, சரளா, பிரேமா, நிந்திமதி திருமலை, ஷீலா தணிகாசலம், சரிதா பவுல், மலைராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.