Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்ட பகுதியில் ரூ.2.10 கோடி செலவில் வளர்ச்சி திட்ட பணிகள்

* அமைச்சர்கள் துரைமுருகன், ஆர்.காந்தி திறந்து வைத்தனர்

* ரூ.1.17 கோடியில் மன்ற அலுவலகம், நீர்தேக்கம் பணிக்கு அடிக்கல்

ராணிப்பேட்டை : காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்ட பகுதியில் ரூ.2.10 கோடி செலவில் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர்கள் திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

காட்பாடி சட்டமன்ற தொகுதி வாலாஜா ஒன்றியத்திற்குட்பட்ட லாலாப்பேட்டை ஊராட்சியில் ரூ.1 கோடியே 72 லட்சம் மதிப்பீட்டில் அரசு மருத்துவமனை கட்டிடம் திறப்பு விழா மற்றும் பொன்னை ஆறு முதல் லாலாப்பேட்டை வரை கிணறு, பைப்லைன், நீர் தேக்க தொட்டி மற்றும் ஊராட்சிமன்ற அலுவலகம் கட்டிடம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டும் விழா நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் சந்திரகலா தலைமை தாங்கினார். லாலாப்பேட்டை ஊராட்சிமன்ற தலைவர் கோகுலன் வரவேற்றார். ஜெகத்ரட்சகன் எம்.பி வாழ்த்துரை வழங்கினார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் கலந்து கொண்டு 15வது நிதிக்குழு மானியத்தில் ரூ.54.75லட்சம் மதிப்பீட்டில் சுகாதார அலுவலகம் கட்டிடத்தினை ரிப்பன் வெட்டி திறந்து, குத்துவிளக்கு ஏற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

இதனை தொடர்ந்து ரூ.87.45 லட்சம் மதிப்பீட்டில் பொன்னை ஆறு முதல் லாலாப்பேட்டை வரை பைப்லைன், கிணறு, நீர் தேக்க தொட்டி மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் ரூ.29.93 லட்சத்தில் லாலாப்பேட்டை ஊராட்சிமன்ற அலுவலகம் ஆகிய பணிகளுக்கு அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

முன்னதாக சீக்கராஜபுரம் ஊராட்சியில் பெல் அண்ணா நகர் பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாய விலை கடை கட்டிடம், பள்ளேரி ஊராட்சியில் ரூ.42.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கிராம செயலக கட்டிடம், கொண்டகுப்பம் ஊராட்சியில் ரூ.42.65 லட்சம் மதிப்பீட்டில் கிராம செயலகம் கட்டிடம், மருதம்பாக்கம் ஊராட்சியில் ரூ.42.65 லட்சம் மதிப்பீட்டில் கிராம செயலகம் மற்றும் ரூ.12.70 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை ஆகியவற்றை அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி ஆகியோர் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, சுகாதார துணை இயக்குனர் செந்தில்குமார், ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன், முகுந்தராயபுரம் ஊராட்சி மன்ற தலைவர் முருகன், ஒன்றிய குழு துணை தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்வம் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.