புழல்: புழல் அடுத்து கதிர்வேடு நகர் பகுதிகளுக்கு தனியாக கிராம நிர்வாக அதிகாரி நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மாதவரம் மண்டலம் 31வது வார்டில் புழல் அடுத்த கதிர்வேடு, எம்ஜிஆர் நகர், அறிஞர் அண்ணா நகர், ராகவேந்திரா நகர், மதுரா மேட்டுப்பாளையம், கலெக்டர் நகர், மகாலட்சுமி நகர், கட்டிட தொழிலாளர்கள் நகர், பத்மாவதி நகர், பிரிட்டானியா நகர், மூர்த்தி நகர், பாலாஜி நகர் உள்ளிட்ட பல்வேறு நகர் பகுதிகள் உள்ளன.
மேற்கண்ட பகுதிகளில் உள்ளவர்கள், பல்வேறு அரசு சம்பந்தமான சான்றிதழ் வாங்க குறிப்பாக சாதி, வருமானம், இருப்பிடம், வாரிசு உள்ளிட்ட சான்றிதழ்கள் பெறுவதற்கு கிராம நிர்வாக அதிகாரியை சந்திக்க 3 கிமீ தூரம் உள்ள சூரப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் சென்று மனு கொடுத்துவிட்டு வருகின்றனர். இதனால், பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. குறிப்பாக, இதற்கு முன்பு கதிர்வேடு மற்றும் சூரப்பட்டு ஊராட்சியாக இருந்தபோது, மக்கள் தொகை குறைந்த அளவு இருந்ததால், இரண்டு ஊராட்சிகளுக்கும் சேர்த்து ஒரே ஒரு கிராம நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டு, சூரப்பட்டு கிராமத்தில் இதுநாள் வரை செயல்பட்டு வருகிறது.
தற்போது, புழல் அடுத்த கதிர்வேடு 31வது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் தொகை அதிகளவில் உள்ளதால், கதிர்வேடு பகுதிக்கு குறிப்பாக 31வது வார்டுக்கு தனியாக கிராம நிர்வாக அதிகாரி நியமித்து, கதிர்வேடு பகுதியிலேயே செயல்படுத்த வேண்டுமென கதிர்வேடு கிராமம் மற்றும் பல்வேறு நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள், வார்டு கவுன்சிலர் சங்கீதாபாபுவை நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட அவர், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையர், வருவாய்த்துறையினர் ஆகியோருக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.