Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

கத்திப்பாரா பகுதியில் நடந்து வரும் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு: விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

சென்னை: சென்னை கிண்டி கத்திப்பாரா பகுதியில் நடந்து வரும் மாதவரம் - சோழிங்கநல்லூர் வழித்தட மெட்ரோ ரயில் கட்டுமான பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திடீரென ஆய்வு செய்தார். அப்போது, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். சென்னை கிண்டி கத்திப்பாரா பகுதியில் நடந்து வரும் 5வது வழித்தடமான மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் மற்றும் 3வது வழித்தடமான மாதவரம் முதல் சிறுசேரி வரையிலான கட்டுமானத்தின் முன்னேற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது முதல்வர், மின்தூக்கி மூலம் உயரே சென்று, உயரத்திலிருந்து கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டார்.

இந்த வழித்தடம், பட் ரோட்டை கடந்த பின், கத்திப்பாரா சென்றடைந்து, பின்னர் உள்வட்ட சாலை வழியாக மேடவாக்கம் பிரதான சாலையை அடைகிறது. கத்திப்பாரா பகுதியில் நெடுஞ்சாலை துறையின் மேம்பாலம், மெட்ரோ வழித்தடம்-1 மற்றும் 2ம் வழித்தடம் அமையப் பெற்றுள்ளமையால், சமச்சீர் காண்டிலீவர் எனப்படும் கட்டமைப்பின் கீழ் சாரக்கட்டு அமைப்புகள் ஏற்படுத்தாமல் கட்டுமானத்தை செயல்படுத்தும் ஒரு சிறப்பு கட்டுமான தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. கத்திப்பாரா பகுதியில் 125 மீட்டர் ஆரம் வளைவுடன் 5 தொடர்ச்சியான பிசிஎம் ஸ்பான்கள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளன.

தண்டவாளங்கள் தரை மட்டத்திலிருந்து 31 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படுகிறது. பின்னர் அவைகள் சுரங்கப்பாதை வழியாக தரையை அடைந்து, அங்கிருந்து கத்திப்பாரா மேம்பாலம், மெட்ரோ வழித்தடம் 1 மற்றும் 2 வழியே செல்கிறது. மொத்த பிசிஎம் நீளம் 413 மீட்டர். மொத்தம் 6 தூண்கள் மற்றும் 10 தூண்கள் இடையிலான கூறுகள் கொண்டதாகும். இதுவரை 80 கூறுகளில் 30 கூறுகள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 2025 டிசம்பர் மாதத்திற்குள் ஆலந்தூர் வரையிலான வழித்தடப் பகுதி முடிவுறும் என கணக்கிடப்பட்டுள்ளது.

கத்திப்பாரா பகுதியில் ஏற்கனவே அமையப் பெற்றிருக்கும் முதல் மற்றும் 2ம் வழித்தடம் மற்றும் கத்திப்பாரா மேம்பாலம் உள்ளடக்கிய சந்திப்பில் சமச்சீர் காண்டிலீவர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதில் உள்ள சவால்கள் குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் அர்சுனன் (திட்டங்கள்) முதல்வரிடம் விரிவாக எடுத்துரைத்தார். இந்த ஆய்வின்போது அமைச்சர் தா.மோ.அன்பரசன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.