கொழும்பு: கச்சத்தீவை ஒருபோதும் விட்டுத் தர முடியாது என இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜிதா ஹெராத் தெரிவித்துள்ளார். தமிழக மீனவா்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றஞ்சாட்டி இலங்கை கடற்படை கைது செய்வதும், அவா்களின் மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்வதும் தொடா்கதையாகி வருகிறது. இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணும் வகையில், கடந்த 1974ம் ஆண்டு இலங்கைக்கு விட்டுக்கொடுக்கப்பட்ட கச்சத்தீவை, இந்தியா மீட்டெடுக்க வேண்டும் என்று தமிழக கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், வெளிநாட்டு ஊடகத்திற்கு இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜிதா ஹெராத் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; கச்சதீவை விட்டுக்கொடுக்கும் எண்ணம் இலங்கைக்கு இல்லை. இந்தியாவில் ஏற்படும் முரண்பாடுகள் அங்குள்ள அரசியல் கட்சிகளுக்கு இடையிலான பிரச்சினை என்று அவர் கூறியுள்ளார். மேலும், இப்பிரச்னையை தூதரக ரீதியாக தீர்வு காண இலங்கை தயாராக உள்ளது. எனினும், இலங்கை ஒருபோதும் கச்சதீவை விட்டுக்கொடுக்க ஒப்புக்கொள்ளாது என்பது உறுதி என்றும் குறிப்பிட்டுள்ள அவர், இது சர்வதேச சட்டத்தால் நிறுவப்பட்டது. இந்தியாவில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள், அரசியல் காரணங்களுக்காகவே கச்சத்தீவு விவகாரத்தை எழுப்புகின்றன என்றும் கூறியுள்ளார்.