சென்னை: சென்னை காசிமேடு பகுதியில் உள்ள படகின் வீல் ஹவுசில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சென்னை காசிமேடு பகுதியில் பழமையான படகின் வீல் ஹவுஸ் இருந்துள்ளது. இதில் அப்பகுதியில் உள்ள விசைப்படகுகள் வெல்டிங் வேலை செய்யும் தாஸ் என்பவர் பயன்படுத்தி வந்ததாகவும், படகின் வீல் ஹவுசில் வெல்டிங் பொருட்களை வைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் வீல் ஹவுசில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவி அருகிலிருந்த பொருட்களும் எரிந்து நாசமானது. இது தொடர்பாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த ராயபுரம் மற்றும் கொருக்குப்பேட்டை தீயணைப்புத்துறையினர் தீயை விரைந்து அணைத்தனர். இந்த தீ விபத்து குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.