கந்தர்பால்: காஷ்மீர் பேரவை தேர்தலையொட்டி முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கந்தர்பால் தொகுதியில் போட்டியிட வேட்புமனுதாக்கல் செய்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் பேரவை தேர்தல் வரும் 18, 25 மற்றும் அக்டோபர் 1 என 3 கட்டங்களாக நடக்கிறது.பேரவை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. பிடிபி மற்றும் பாஜ கட்சிகள் தனித்தனியே போட்டியிடுகின்றன. தேசிய மாநாட்டு கட்சியின் துணை தலைவர் உமர் அப்துல்லா, கந்தர்பால் தொகுதியில் போட்டியிடுவதற்கு நேற்று வேட்புமனுதாக்கல் செய்தார்.
கந்தர்பால் தொகுதியில் உமர் அப்துல்லாவின் தந்தை மற்றும் தாத்தா ஆகியோர் பல முறை வெற்றி பெற்றுள்ளனர். இதற்கு முன்னதாக 2009ம் ஆண்டு 2014ம் ஆண்டு வரை கந்தர் பால் தொகுதி எம்எல்ஏவாக உமர் அப்துல்லா இருந்தார். அதன் பின்னர் சோன்வார் தொகுதிக்கு மாறினார். அந்த தொகுதியில் போட்டியிட்ட போது பிடிபி கட்சியின் முகமது அஷ்ரப் மீர் என்பவரிடம் தோல்வியடைந்தார். பல ஆண்டுகளுக்கு பின் கந்தர்பால் தொகுதியில் போட்டியிட அவர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார்.அண்மையில் நடந்த மக்களவை தேர்தலில் பாரமுல்லா தொகுதியில் போட்டியிட்ட உமர் தோல்வியடைந்தார்.