Monday, September 9, 2024
Home » காசி புண்ணியம் கோயம்பேடில்!

காசி புண்ணியம் கோயம்பேடில்!

by Nithya
Published: Last Updated on

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில், கோயம்பேடு பகுதியில் சுமார் 25,200 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ளது குறுங்காலீஸ்வரர் கோயில். 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான திருத்தலம். வால்மீகி முனிவர், பகவான் ராமனின் மகன்கள் குசன், லவன் ஆகியோர் வழிபட்ட புண்ணிய ஸ்தலமாக இந்த கோயில் விளங்கி வருகிறது.

சோழ மன்னன் ஒருவன், இவ்வழியே சென்றபோது தேர்ச்சக்கரம், பாறை ஒன்றின் மீது மோத, அதிலிருந்து ரத்தம் வெளிப்பட்டது. பயந்துபோன மன்னன், இறங்கிப் பார்க்க, அது ஒரு லிங்கம் என்பதைக் கண்டுகொண்டான். தன் தவறுக்குப் பிராயசித்தமாக, உடனே அங்கே ஒரு கோயில் நிர்மாணித்தான். தேர்ச்சக்கரம் ஏறியதால் இந்த லிங்கத்தின் பாணம் பாதிவரை பூமிக்குள் புதைந்துவிட்டது. எனவே இங்கு சிவன் குறுகியவராக காட்சி தருகிறார்; ‘குறுங்காலீஸ்வரர்’ என்ற பெயரும் கொண்டார். ஸ்ரீராமனின் பிள்ளைகள் குசனும், லவனும் இத்தலத்துக்கு வந்து இந்த ஈசனை வழிபட்டிருக்கிறார்கள். அதனால் இவர் குசலவபுரீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார் (‘குசலவம்’ என்றால் “குள்ளம்’’ என்றும் பொருள் உண்டு; இதனாலேயே இந்தப் பெயர் என்றும் சிலர் சொல்கிறார்கள்).

வனவாசம் முடிந்து, இராவணனை மாய்த்து சீதையை மீட்டுக் கொண்டு அயோத்தி திரும்பியாயிற்று. பட்டாபிஷேகமும் நடந்தாயிற்று. ஒரு ராஜாங்க பொறுப்பாக நாட்டு மக்கள் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அறிய ஆசைப்பட்டார் ராமர். அப்போது, ஒரு சலவைத் தொழிலாளி தன் மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டான். தான் தவறிழைக்கவில்லை என்று அழுது மன்றாடிய மனைவியிடம் ‘நான் ஒன்றும் ராமன் இல்லை. பல நாட்கள் தன்னை விட்டுப் பிரிந்திருந்த சீதையை அவர் சேர்த்துக் கொண்டது போல் உன்னை அழைத்துக் கொள்ள நான் தயாராக இல்லை,’ என்றான். இந்தத் தகவலை ஒற்றன் மூலம் அறிந்த ராமன், குடிமகனின் குரலுக்கு மதிப்பளிக்க, லட்சுமணனை அழைத்து, சீதையை காட்டில் விட்டுவிட்டு வருமாறு பணித்தார்.

அவ்வாறு சீதை வந்த அந்த காட்டில் வால்மீகி முனிவர் ஆசிரமம் அமைத்து யாகங்கள் இயற்றிக் கொண்டிருந்தார். அவர் சீதையைக் கண்டார். அவள் கர்ப்பவதியாக இருப்பதை அறிந்து, உடனே தன் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று வேண்டிய உதவிகளைச் செய்தார். அவருடைய ஆதரவால், சீதையின் குசன் – லவன் என்று இரட்டைப் புத்திரர்களை ஈன்றாள். அவர்களும் அந்த ஆசிரமத்தில் ஞானக்கல்வியும், வீரக் கல்வியும் கற்றனர். ஒருநாள் கம்பீரமாக வந்த குதிரையைப் பின்தொடர்ந்தபடி சில வீரர்கள் காட்டைக் கடக்க முயன்றனர். அவர்களை பிள்ளைகள் இருவரும் தடுத்து நிறுத்தினர்.

‘‘இது அஸ்வமேத யாக குதிரை. தன்னை வெற்றி கொள்ள யாருமில்லை என்பதை அறிவிக்கும் விதமாக, திக்விஜயம் புரிய ஸ்ரீராமர் அனுப்பி வைத்திருக்கிறார்,’’ என்று விளக்கம் கொடுத்தனர் வீரர்கள். ஆனாலும் குதிரையின் அழகைக் கண்ட சிறுவர்கள், அந்த வீரர்களுடன் சண்டையிட்டு, அவர்களை விரட்டி விட்டு, குதிரையைப் பிடித்து கட்டி வைத்தனர். அடுத்தடுத்து குதிரையை மீட்க வந்தவர்களையெல்லாம் குச-லவர்கள் தோற்கடித்து விரட்டினர். இறுதியில் அனுமன் வந்து அவர்கள் முன் விஸ்வரூபமாய் காட்சி தந்தார். ஆனால் அவரையும் ராமநாமம் சொல்லி இயல்புக்கு வரவழைத்து தியானத்தில் மூழ்கடித்து வீழ்த்தி விட்டனர் பிள்ளைகள். கடைசியில் ராமரே வந்தார். வந்திருப்பவர் யாரென அறியாத குச-லவன் அவரையும் எதிர்த்துப் போரிட முயற்சிக்க, இந்தத் தகவல் வால்மீகிக்கு போனது.

அவர் ஓடோடி வந்து, அவர்களிடையே சமாதானமும் ஒருவருக்கொருவர் அறிமுகமும் செய்து வைத்தார். தந்தையை எதிர்த்து போரிட முயன்ற காரணத்தால் குசலவனை பித்ரு தோஷம் பிடித்துக் கொண்டது. அந்த தோஷம் நீங்க வழி கூறுமாறு அவர்கள் வால்மீகியிடம் வேண்டினர். ‘‘சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து வழிபட்டால் தோஷம் நீங்கும்’’ என்றார் முனிவர். அதன்படி தாங்கள் போரிட்ட அதே இடத்தில் ஒரு பலாமரத்தின் அடியில் சிவலிங்கத்தை நிறுவி பூஜை செய்தனர்.

லிங்கம் பெரியதாக இருந்ததால் சிறுவர்களால் நிமிர்ந்து நின்று பூசிப்பது சிரமமாக இருந்தது. அதனால் அவர்கள் எளிதாய் பூசிக்க ஏற்றவாறு தன் திருமேனியை குறுக்கிக் கொண்டு குறுங்காலீஸ்வரராய் காட்சி அளித்தார் ஈசன். அவருடைய கருணையைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்த பாலகர்கள் தொடர்ந்து வழிபட்டு தோஷ நிவர்த்தி அடைந்தனர். இந்த குசலவபுரீஸ்வரர் என்ற குறுங்காலீஸ்வரரை வழிபட பித்ருதோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

இக்கோயில் வடக்கு நோக்கியிருப்பதால், மோட்ச தலமாக கருதப்படுகிறது. பித்ருதோஷம் உள்ளவர்கள் குசலவ தீர்த்தத்தில் பரிகார பூஜைகளும், தர்ப்பணமும் மேற்கொள்கிறார்கள். மறைந்த மூதாதையருக்கு நீண்ட நாள் நீத்தார் கடன் செலுத்தாதவர்கள் அல்லது அவர்கள் மறைந்த திதி, நட்சத்திரம் தெரியாதவர்கள், இத்தலத்துக்கு வந்து எந்த நாளிலும் அந்தக் கடனைச் செலுத்தலாம்.

கோபுரத்திற்கு கீழே கபால பைரவர், வீரபத்திரர் இருவரும் அருள் பெருக்குகின்றனர். தட்சிணாமூர்த்தி, மூலவர் சந்நதியின் பின்புறத்தில் லிங்கோத்பவருக்கு உரிய இடத்தில் கொலுவிருக்கிறார். இது மிகவும் அபூர்வமான அமைப்பு. கோயிலுக்கு முன்னே பெரியதாக 16 கால் மண்டபம் உள்ளது. அதன் தூண்களில் ராமாயணக் காட்சிகளை விளக்கும் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. ஒரு தூணில் சரபேஸ்வரர் காணப்படுகிறார். ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் இவருக்கு பூஜை நடக்கிறது. இவரருகே அணையா தீபம் இருக்கிறது.

சரபேஸ்வரர் வழிபாடு இங்கு மிகப் பிரபலம். ஞாயிறு தோறும் மாலை, ராகுகால நேரத்தில் பெருந்திரளான மக்கள் கூடுகிறார்கள். இத்தலத்தை ‘‘ஆதிபிரதோஷத் தலம்” என்கிறார்கள். ஒரு பிரதோஷ தினத்தில் குறுங்காலீஸ்வரரைத் தரிசித்தால் ஆயிரம் பிரதோஷ தரிசனம் செய்த பலனும், ஒரு சனி பிரதோஷ நாளில் தரிசனம் செய்தால் கோடி பிரதோஷ தரிசன பலனும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

கோயிலில் அர்த்த மண்டபம் 40 தூண்களுடன் பிரமாண்டமாக அமைந்துள்ளது. அதில்தான் குசலவபுரீஸ்வரர் என்கிற குறுங்காலீஸ்வரரும், அறம் வளர்த்த நாயகி எனப்படும் தர்மசம்வர்த்தினி அம்பாளும் தனித்தனியே சந்நதி கொண்டிருக்கிறார்கள். சுவாமியும், அம்பிகையும் வடக்கு நோக்கி உள்ளனர். தன்னை நாடிவரும் பக்தர்கள் அறிந்தும், அறியாமலும் இழைத்திருக்கக் கூடிய குற்றங்களைப் பொறுத்து அவர்களை மனம் திருந்த வைக்கிறார் குறுங்காலீஸ்வரர். அம்மை இடது காலை முன்னோக்கி வைத்தபடி காட்சி தருவது ஒரு சிறப்பம்சம். தன் பக்தர்களுக்கு ஓடோடிச் சென்று விரைவாக அருள் புரிவதற்காகத் தயாராக இருக்கிறாராம்! மற்றும், கோயிலில் வள்ளி-தெய்வயானை சமேத முருகன், நடராஜர், தேரில் மனைவியருடன் சூரியன் ஆகியோர் தனித்தனி சந்நதியில் எழுந்தருளியிருக்கிறார்கள்.

கோயில் நந்தவனத்தில் இரு வில்வ மரங்களுக்கு இடையே வேப்ப மரம் ஒன்று பிணைந்து இணைந்து நிற்கின்றது. அரிய அமைப்பிலான இந்த விருட்சங்களை வழிபட, பல நன்மைகள் கிட்டுகிறது என்கிறார்கள் பக்தர்கள். காசி விஸ்வநாதர் புண்ணிய கோத்திரம் இருக்கும் வட திசையை நோக்கி குறுங்காலீஸ்வரர் வீற்றிருப்பதால், இந்தத் தலம் காசிக்கு இணையான தலம் என்ற பெருமையும் உடையது.

கோயில், காலை 5.30 முதல் 12 மணி வரை; மாலை 4.30 முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். கோயில் தொடர்புக்கு தொலைபேசி எண்: 0442479 6237.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது குறுங்காலீஸ்வரர் திருக்கோயில்.

You may also like

Leave a Comment

twenty − 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi