கரூர்: கரூர் மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா தேரோட்டம் இன்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். மேலும் ஏராளமானோர் தீச்சட்டி, அலகு குத்த வந்து அம்மனுக்கு நேர்த்திகடன் செலுத்தினர். கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விமரிசையாக நடைபெறும். இந்நிலையில் இந்தாண்டுக்கான வைகாசி திருவிழா கம்பம் நடும் நிகழ்ச்சி மே 11ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக பூச்சொரிதல் விழா கடந்த 16ம் தேதி இரவு விடிய விடிய நடந்தது. கடந்த 18ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து தினம்தோறும் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடந்து வருகிறது. இந்நிலையில் கோயில் திருவிழா தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடந்தது. காலை 7.05 மணிக்கு தேரில் அம்மன் எழுந்தருளினார். இதையடுத்து திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக தேர் சென்றபோது பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர். தேரோட்டத்தையொட்டி அமராவதி ஆற்றிலிருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். மேலும் பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி ஏந்தியும் ஊர்வலமாக கோயிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தேரோட்டத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இதேபோல், நாளை, நாளைமறுநாள்(28ம் தேதி) வரை பக்தர்கள் பால்குடம், அலகு காவடி, அக்னி சட்டி எடுத்து வருதல் மற்றும் மாவிளக்கு போடுதல் நிகழ்வு நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி வரும் 28ம் தேதி மாலை நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். இதனால் வரும் 28ம் தேதி கரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 8ம் தேதி வரை திருவிழா நடக்கிறது.