கரூர்: கரூர் அருகே 100 அடி ஆழமுள்ள கல் குவாரி குழியில் டேங்கர் லாரி கவிழ்ந்து ஓட்டுநர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பாதுகாப்பின்றி பணியில் ஈடுபடுத்தியதாக குவாரியில் பங்குதாரராக உள்ள அமமுக மாவட்ட செயலாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தாழையூத்துப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீசெல்வ விநாயகர் ப்ளூ மெட்டல் கல்குவாரியில் விபத்து நடந்தது.
கரூர் மாவட்டம் க.பரமத்தி சுற்றுவட்டார பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் ஒரு சில கல்குவாரிகள் அரசு நிர்ணயம் செய்யப்பட்ட செய்த அளவை விட கூடுதலாக பள்ளம் தோண்டி பாறைகளை எடுத்து கட்டுமானத்திற்கு தேவையான மணலாக மாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் க.பரமத்தி அருகே செயல்பட்டு வரும் ஸ்ரீ செல்வவிநாயகர் ப்ளூ மெட்டல்ஸ் கல்குவாரியில் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வந்த நிலையில் 100 அடி ஆழ குழியில் 3 அடி அளவில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனை எடுப்பதற்காக நாகப்பட்டினம் ஆயங்குடிபள்ளம் பகுதியை சேர்ந்த சுதாகர் என்ற ஓட்டுநரை பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.
குழியில் தேங்கிய தண்ணீரை எடுப்பதற்காக 22ஆயிரம் கொள்ளளவு கொண்ட லாரியில் தண்ணீர் நிரப்பி மேலே வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக 72 அடியில் இருந்து லாரி பாறைக்குள் கவிழ்ந்து விழுந்து விபத்திற்குள்ளானது. அப்போது அருகிலிருந்தவர்கள் சத்தம் கேட்டு பாறைக்குள் தலை மற்றும் உடல் நசுங்கி மயக்க நிலையில் சிக்கியிருந்த ஓட்டுனரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமத்தினர்.
அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். உரிய பாதுகாப்பின்றி லாரி ஓட்டுனரை பயன்படுத்தியதாக உரிமையாளரில் ஒருவரான அமமுக மாவட்ட செயலாளர் தங்கவேல் மற்றும் பங்குதாரரான சுப்பிரமணி, சக்திவேல், கந்தசாமி ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.