*வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி
*பேராபத்து நிகழும் முன் சீரமைக்கப்படுமா?
கரூர் : கரூர்-கோவை மற்றும் ஈரோடு சாலைகள் சந்திக்கும் இடத்தில் நிலவி வரும் போக்குவரத்து பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண அரசு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூரில் இருந்து கோவை, ஈரோடு, தாராபுரம், பழனி போன்ற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள், பேருந்துகள் அனைத்தும் திருக்காம்புலியூர் ரவுண்டானாவை தாண்டி முனியப்பன் கோயில் அருகே கோவை-ஈரோடு சாலைகளில் பிரிந்து செல்கிறது. இதேபோல், இந்த பகுதிகளில் இருந்து கரூர் நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் முனியப்பன் கோயில் சந்திப்பு பகுதியில் இணைந்து கரூர் நோக்கி சென்று வருகிறது.
முனியப்பன் கோயில் அருகே ஒரேஇடத்தில், கரூர், ஈரோடு, கோவை ஆகிய பகுதிகளுக்கான வாகனங்கள் இணைந்து பல்வேறு பகுதிகளுக்கு முன்னேறி செல்லும்போது, போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.இதனை கட்டுப்படுத்தும் வகையில், சில ஆண்டுகளுக்கு முன் முனியப்பன் கோயில் அருகே சிக்னல் அமைக்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. அதற்கு பிறகு அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிக்னல் செயல்படவில்லை. இதனை பராமரிக்கவும் யாரும் முன்வரவில்லை.
இதன் காரணமாக கரூர்-கோவை மற்றும் ஈரோடு சாலைகள் சந்திக்கும் இடத்தில் வாகன குளறுபடி ஏற்பட்டு, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், சிக்னல் செயல்படாததால் வாகனங்கள் தாறுமாறாக செல்கிறது. அவசரகதியில் வரும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியால் நெரிசலில் சிக்குகிறது. மேலும், அதிகவேகத்தில் செல்லும்போது, விபத்துகள் ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் இப்பகுதியில் வாகன போக்குவரத்து அதிகமாகவே உள்ளது.
நீண்ட காலமாக பிரச்னையாக இருந்து வரும் இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் சிக்னல் அமைத்தோ? அல்லது மாற்று ஏற்பாடுகள் மேற்கொண்டோ வாகனங்கள் இந்த பகுதியை எளிதாக கடந்து செல்லும் வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் செவிடன் காதில் ஊதிய சங்காக கோரிக்கைகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. செயல்படாத சிக்னலால் பேராபத்து ஏற்பட்டால்தான் நடவடிக்கை எடுப்பார்களா? என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு அனைவரின் நலன் கருதி, சாலைகள் சந்திக்கும் இடத்தில் எந்தவிதமான பிரச்னையும் இன்றி வாகனங்கள் எளிதாக முன்னேறிச் செல்லும் வகையில் தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.