மதுராந்தகம்: கருங்குழி பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.1.35 கோடி மதிப்பில் நவீன எரிவாயு தகனமேடை கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும், கருங்குழி பகுதியை சுற்றி உள்ள கிராமங்களில் ஏராளமான ஆடை, ரசாயனம், மோட்டார் வாகனங்கள் உதிரிபாகம் தயாரிப்பு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இதனால், இப்பகுதியில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மேலும், வட மாநிலங்களில் இருந்தும் இங்குள்ள தனியார் தொழிற்சாலைகளில் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பகுதியில் மக்கள் தொகை அதிகரித்து வருவதால் இறப்பின் சதவீதமும் அதிகரித்து வருகிறது. இதனால், இங்கு நவீன எரிவாயு தகன மேடை அமைக்க வேண்டும் என பேரூராட்சி சார்பில், அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள கிளியாற்றின் அருகில், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள சுடுகாட்டில், கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் மூலமாக நவீன எரிவாயு தகன மேடை ரூ.1.35 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது.
இந்த நவீன எரிவாயு தகனமேடை குறித்து செயல் அலுவலர் அருள்குமார் கூறுகையில், ‘புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நவீன எரிவாயு தகன மேடையை மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று, விரைவில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இருந்து ஆதரவற்றோர் இறந்தவர் உடலை கொண்டு வந்து தகனம் செய்து சோதனை முயற்சி செய்யப்பட உள்ளது. இதற்குப் பின்பு எரிவாயு தகன மேடையில் கருங்குழி பேரூராட்சி 15 வார்டுகளில் இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளது’ என்றார்.
* வைரஸ் பாதித்தவர்கள்
கொரோனா பெருந்தொற்று காலங்களில், கருங்குழி பேரூராட்சியில் வைரஸ் பாதித்து பலியானவர்கள் தகனம் செய்ய நவீன எரிமேடையை தேடி அலைந்து திரிந்து மறைமலை நகரில் இருந்த தகன மேடைக்கு பல்லாயிரம் ரூபாய் செலவு செய்து வாகனங்களில் கொண்டு சென்று உடலை தகனம் செய்தனர். இதனால், பொதுமக்கள் கடுமையாக அவதிக்குள்ளாகினர். தற்போது, இதுபோன்ற தொற்று காரணமாக இறப்பவர்களை இங்கு எரிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
* சமத்துவ தகன மேடை
கருங்குழி பேரூராட்சியில் ஜாதிக்கு ஒரு சுடுகாடு, மதத்திற்கு ஒரு சுடுகாடு, இடுகாடு என தனித்தனியாக உள்ளநிலையில், பல்வேறு பிரச்னைகளும் இருந்து வருகிறது. இந்நிலையில், அனைவரும் சமத்துவமாக பயன்படுத்தக்கூடிய நவீன எரிவாயு தகன மேடை கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் மூலமாக கட்டி முடிக்கப்பட்டது. அனைவரின் வரவேற்பை பெற்றுள்ளது.