குளச்சல் : குளச்சல் அருகே வெவ்வேறு பகுதிகளில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாத்தா உறவுமுறை கொண்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 10 வயது சிறுமி. தந்தை இறந்துவிட்டார். தாயும் பிரிந்து சென்றதால் சிறுமியை தூத்தூர் வட்டவிளாகம் பகுதியை சேர்ந்த தாத்தா உறவு முறையான ஜாண் (67) என்பவர் தனது வீட்டில் தங்க வைத்திருந்தார். இதற்கிடையே கடந்த 2023 ஏப்ரல் முதல் சிறுமியை மிரட்டி ஜாண் பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை கூற யாரும் இல்லை என்பதால் சிறுமி வேதனையுடன் தவித்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் சிறுமி எதிர்ப்பு தெரிவிக்கவே, சிறுமியை அழைத்துக்கொண்டு அதேபகுதியில் உள்ள குழந்தைகள் இல்லத்தில் ஜாண் சேர்த்துவிட்டார்.
அப்போது ஜாண் வீட்டில் தங்கியிருந்த போது தனக்கு நேர்ந்த கொடூரத்தை குழந்தைகள் இல்லத்தில் வசிக்கும் சக சிறுமிகளிடம் கூறி அழுது உள்ளார். இந்த விவகாரம் பூதாகரமானதை தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விசாரணை நடத்திய அவர் குளச்சல் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜாணை கைது செய்தனர்.
அதேபோல் கருங்கல் பூட்டேற்றி அருகே உள்ள கிராம பகுதியை சேர்ந்தவர் முரளி (64). தனது பேத்தி உறவுமுறையான 6 வயது சிறுமியை அடிக்கடி கடைக்கு அழைத்து சென்று சாக்லெட், பிஸ்கெட் வாங்கிக்கொடுப்பாராம். ஆனால் சிறுமி கடைக்குபோய்விட்டு திரும்பி வரும்போது மிகவும் சோர்வுடனே வருவாராம். இதனை சிறுமியின் தாயும் கவனித்துள்ளார். இந்த நிலையில் சமீபகாலமாக முரளி கடைக்கு கூப்பிட்டபோது சிறுமி வரமாட்டேன் எனக்கூறி அடம்பிடித்துள்ளார். மேலும் முரளியை கண்டாலே நடுநடுங்கி போய்விடுவாராம்.
இதனை கவனித்த சிறுமியின் தாய் விசாரித்தபோது, தன்னை கடைக்கு அழைத்து செல்வதாக கூறி அழைத்து சென்று முரளி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறி கதறி அழுதார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் குளச்சல் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் முரளி மீதுபோக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.