*பொதுமக்களை தாக்கியதால் பரபரப்பு
கருங்கல் : கருங்கலில் இருந்து திங்கள்சந்தை செல்லும் சாலையில் மாத்திரவிளை குருசடி அருகே நேற்று முன்தினம் இரவு ஒரு பைக் சென்று கொண்டு இருந்தது. அந்த பைக்கில் 2 வாலிபர்கள் இருந்தனர். பின்னால் இருந்த வாலிபர் சட்டை அணியாமல் இருந்தார். பைக் சென்று கொண்டு இருந்தபோது, சட்டை அணியாமல் இருந்த வாலிபர் திடீரென பைக்கில் இருந்து கீழே குதித்தார்.
இதை பார்த்த பொதுமக்கள் விபத்து நடந்து விட்டதாக கருதி அப்பகுதியில் குவிந்தனர். அவர்கள் வாலிபரிடம் விசாரித்தபோது அந்த வாலிபர் பொதுமக்களை தாக்கினார். தொடர்ந்து தனது தலையை சுவரில் பலமாக மோதி சுயநினைவு இழந்து கீழே விழுந்தார்.இதுகுறித்து பொதுமக்கள் கருங்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடம் வந்து பைக்கில் இருந்த மற்றொரு வாலிபரிடம் விசாரித்தனர்.
இதில் வாலிபர்கள் இருவரும் குமரி நெல்லை எல்லையோர கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதும், நாகர்கோவிலில் உள்ள ஐடிஐயில் படித்து வருவதும் ெதரியவந்தது. மேலும் ஆசிரியர் ஒருவரின் வீடு கருங்கலில் இருப்பதாகவும், அவரை பார்க்க தான் வந்ததாகவும்,அப்போது போதையில் இருந்த வாலிபர் தனக்கு போன் செய்து தான் போதையில் இருப்பதாகவும், எனவே என்னை நாகர்கோவில் அழைத்து செல்லுமாறு கூறியதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் 108 ஆம்புலன்ஸ்சை வரவழைத்து அந்த வாலிபரை தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் பரிசோதனையில் அந்த வாலிபர் கஞ்சா போதையில் இருப்பது தெரியவந்தது.இதையடுத்து மேல் சிகிச்சைக்காக அந்த வாலிபரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.