Tuesday, July 8, 2025
Home ஆன்மிகம் அபயக் கரமும் கருணை கடலும்

அபயக் கரமும் கருணை கடலும்

by Porselvi

பல வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது. ஒரு நாள் மாலை நேரம். ஸ்ரீ காஞ்சி சங்கர மடத்தில் மகா பெரியவாளை தரிசிக்க ஏகக் கூட்டம். பெரியவா தன் அறையை விட்டு வெளியே வந்து வழக்கமாக உட்காரும் மேடையில் சாய்ந்தவாறு அமர்ந்தார். ஒவ்வொருவராகப் பெரியவாளை நமஸ்கரித்து, தம் குறைகளைத் கூறினர். தக்க பதிலைப் பொறுமையுடன் சொல்லி ஆசியும் பிரசாதமும் வழங்கினார் ஸ்வாமிகள்.

அன்று இரவு எட்டரை மணி வரை அனைவரும் தரிசித்துச் சென்றுவிட்டனர். ஸ்வாமிகள் தனது அறைக்கு எழுந்து போக இருந்த நிலையில் ஒரு தம்பதி மற்றும் ஓர் இளம் வயதுப் பெண்ணும் வேகமாக ஓடி வந்தனர். மூவரும் பெரியாவளை நமஸ்கரித்து எழுந்தனர். தாங்கள் கொண்டு வந்திருந்த பொருட்களை அங்கிருந்த பெரிய மூங்கில் தட்டுகளில் வைத்து, ஸ்வாமிகளுக்கு சமர்ப்பித்தனர்.

நிரப்பப்பட்டிருந்த மூங்கில் தட்டுகளைச் சற்று நேரம் உற்று பார்த்து, ஒவ்வொன்றிலும் கற்கண்டு, முந்திரி, பிஸ்தா, பாதாம், திராட்சை, அக்ரூட், பேரீச்சை என வகை வகையான பதார்த்தங்கள். கொண்டு வந்தவர்களை ஆச்சரியத்தோடு நிமிர்ந்து பார்த்தார் ஸ்வாமிகள். அவர் முகத்தில் சந்தோஷம்.“அட, நம்ம ஸ்வாமிநாதனா? கனடாவிலிருந்து எப்ப வந்தே? ஆம்படையாளும் வந்திருக்காளா… பேஷ்… பேஷ்! ரொம்ப சந்தோஷம்.

எல்லாரும் க்ஷேமம் தானே? நீ பாட்டுக்கு ஏகப்பட்ட முந்திரி, திராட்சை எல்லாம் எதுத்தாப்ல கொண்டு வந்து வெச்சிருக்கே? ஏதாவது கல்யாண விசேஷமா? இதோ, உன் பக்கத்திலே நிக்கறாளே உன் பொண்தானே? அவளுக்குக் கல்யாணம் நிச்சயம் பண்ணிருக்கயாக்கும்? ஏன்டா ஸ்வாமிநாதா… ஒரு தட்டுலயும் விவாஹ பத்திரிகையக் காணோமே?” என்று கேட்டார் ஸ்வாமிகள். அவ்வளவுதான். எதிரில் நின்றிருந்த மூவரும் மடை திறந்த வெள்ளம் போல் தேம்பி அழுதபடியே ஆச்சர்யாள் பாதங்களில் நமஸ்கரித்தனர். மகா ஸ்வாமிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. சற்று நிதானப்படுத்திக் கொண்டு, “ஏன்டாப்பா ஸ்வாமிநாதா… ஒன்ன நா ஏதாவது தப்பாக கேட்டுட்டேனோ? இப்படி குழந்தை மாதிரி அழரியே?” என்று வாஞ்சையுடன் கேட்டார். உடனே ஸ்வாமிநாதன்;

“சிவ சிவா! தப்பு தப்பு. அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லே பெரியவா. பொண்ணுக்குக் கல்யாணம் நிச்சயம் பண்ணிருக்கியா? பத்திரிக்கை எங்கேனு? நீங்க கேட்டதும் எங்களால துக்கத்தைக் கட்டுப்படுத்த முடியலே. இவளுக்கு இப்ப இருபத்துஐந்து வயசாகிறது. இவளோட பதினேழாவது வயசிலேர்ந்து வருஷம் தவறாம கனடாவிலிருந்து வந்து ரெண்டு மாசம் தங்கி முயற்சி பண்றோம் பெரியவா. ஒரு வரனும் அமையல. தட்டிப் போயிடறது. எல்லாம் இருந்தும், எதுவும் அமையவில்லை” என்று மீண்டும் அழ ஆரம்பித்தார். இப்போது இரவு மணி ஒன்பதரை. அங்கு நிலவிய இறுக்கத்தைப் போக்க நிலைமையைப் புரிந்துகொண்ட ஆச்சார்யாள்;

“சரி, சரி… வருத்தப்படாதீங்கோ… மூணு பேரும் இப்டி ஒக்காருங்கோ” என எதிரில் கை காண்பித்தார். ஆச்சார்யாள் பேச ஆரம்பித்தார்;“ஸ்வாமிநாதா, நோக்கு இப்டி ஒரு மனக்கஷ்டமா? கோயில் குளங்களுக்கும், ஏழைகளுக்கும் நிறைய தானம் தர்மம் பண்றேனு நேக்கு நன்னா தெரியும். அது சரி… நீ கனடா போய் செட்டிலாகி எத்தனை வருஷமாறது?”“இருவது வருஷமாறது பெரியவா” என்றார் ஸ்வாமிநாதன். ஸ்வாமிகள் அந்தப் பெண்ணை நோக்கிக் கை காண்பித்து; “இவ உனக்கு ஏக புத்ரிதானே? என்ன பேரு” என்று சிரித்தபடியே கேட்டார்.

ஸ்வாமிநாதன் உடனே, “இவ பேரு லட்சுமி. ஏக புத்ரிதான் பெரியவா” என்றார்.“ஜோசியர் கிட்ட இவ ஜாதகத்தைக் காமிச்சியோ?” என்று ஆச்சார்யாள் கேட்டார்.“ஏகப்பட்ட ஜோசியரை பாத்துட்டேன். ஒவ்வொர்த்தரும் ஏதேதோ தோஷங்கள், பரிகாரங்களும் சொன்னா… எல்லாமே பண்ணிட்டேன்.”“என்னென்ன பண்ணினே?” என்னார் ஆவலுடன். “ராமேஸ்வரத்திலே தில ஹோமத்துடன் பித்ரு தோஷப் பரிகாரம். கஞ்சனூரில் சுக்ர ப்ரீதி. ஆலங்குடியில் குரு ப்ரீதி. திருமணஞ்சேரியிலே பரிகாரம். திருநள்ளார்லே நள தீர்த்த ஸ்நானத்தோடு சனி ப்ரீதி… என எல்லாம் பண்ணிட்டேன் பெரியவா” என்று ஸ்வாமிநாதன் சொல்லி முடிப்பதற்குள்…

“பிரயோஜனம் இல்லேங்றே…” என்றார் ஸ்வாமிகள். பெரியவா, ஸ்வாமிநாதனின் மனைவியைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார். “பெண் கல்யாணத்துக்கு நகையெல்லாம் ரெடியா வாங்கி வெச்சுட்டியோ?”“எல்லாம் ரெடி” என்றாள் அம்மணி.“நல்லது. எத்தனை பவுன் போடறே?” என்று கேட்டார் ஸ்வாமிகள். விஸ்வநாதன் பதில் சொன்னார், “எங்க பொண்ணுக்கு நாற்பது பவுன் அதோட சேர்த்து தனித்தனியா ரெண்டு பதினைந்து பவுனுக்கு செட்டா நகைகள் பண்ணி வெச்சுருக்கு.” பெரியவா கேட்டார், “அது எதுக்கு பதினைந்து பவுன்ல தனியா ரெண்டு செட்டு?” உடனே ஸ்வாமிநாதன், “அது ஒண்ணுமில்லே பெரியவா.

லட்சுமிக்குக் கல்யாணம் நிச்சயமானா, அந்தக் கல்யாணத்தோடு, ரெண்டு ஏழைப் பெண்களுக்கும், எல்லாச் செலவும் செய்து விவாஹம் பண்ணி வைக்கறதா தீர்மானம். அதுக்காகத்தான் அந்த ரெண்டு செட் நகைகள். ஆனா, லட்சுமிக்கே நிச்சயம் ஆக மாட்டேங்கறதே பெரியவா” என்று ஆதங்கப்பட்டார். ஸ்வாமிகள் யோசனையில் ஆழ்ந்தார். அப்போது இரவு மணி பத்தரை. ஸ்வாமிகள், ஸ்வாமிநாதனை பார்த்துக் கேட்டார்,

“நீங்கள்ளாம் இன்னும் எத்தனை நாளுக்கு இங்கே இருப்பேள்?”
“இன்னும் இருபது நாள் இருப்போம் பெரியவா.”
“பேஷ்… பேஷ்” என்ற ஸ்வாமிகள்,
“நீங்கள்லாம் சாப்டாச்சோ?” என்று கேட்டார்.

“இன்னும் ஆகலே” என்றார் ஸ்வாமிநாதன். உடனே பெரியவா உக்ராணத்திலிருந்த சமையல்காரரை அழைத்து வரச் சொல்லி, “என்ன இருக்கு?” என்று கேட்டார். அரிசி உப்புமாவும் பூசணிக்காய் சாம்பாரும் இருப்பதாகக் சமையற்காரர் கூறினார். ஸ்வாமிநாதன் குடும்பத்தை உள்ளே போய் சாப்பிட்டுவிட்டு வருமாறு கூறினார் ஸ்வாமிகள். அவர்களும் சாப்பிட்டுவிட்டு வந்தனர். ஸ்வாமிகள் அங்கேயே காத்திருந்தார். இரவு மணி பதினொன்று. ஸ்வாமிகள், ஸ்வாமி நாதனை வாஞ்சையோடு பார்த்தார்.

“ஸ்வாமிநாதா, நோக்கு பெரிய மனசு. ஒம் பொண்ணு கல்யாணத்தோட இன்னும் ரெண்டு ஏழைப் பெண்களுக்கும் தர்மமா விவாஹம் பண்ணி வெக்கணும்கிறதுக்காக நகை யெல்லாம் முன்கூட்டியே வாங்கிட்ட… என்ன உயர்ந்த மனசு நோக்கு! காமாட்சி காப்பாத்துவா” என்று ஆதரவோடு வார்த்தைகளால் வருடிக் கொடுத்த ஆச்சார்யாள், “நீ நாளைக்கு உன் குடும்பத்தோட திருவானைக்காவல் போ. அங்கு அம்மா அகிலாண்டேஸ்வரிக்கும், ஜம்புலிங்கேஸ்வரருக்கும் அபிஷேக ஆராதனையெல்லாம் பண்ணி வெச்சுப் பிரார்த்தியுங்கோ. உன் பெண் லட்சுமியை என்ன பண்ணச் சொல்றே… அம்பாள் அகிலாண்டேஸ்வரிக்கு பளபளனு காதுலே ‘தாடங்கம்’ சாத்தியிருப்பா.

அத வெச்ச கண் வாங்காம கொஞ்ச நாழி தரிசனம் பண்ணிடே, சீக்கிரம் நேக்கு கல்யாணமாகணும்னு வேண்டிக்க சொல்லு. என்று முடிப்பதற்குள்… ஸ்வாமிநாதன், “பெரியவா… எங்கள் குலதெய்வமே திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரிதான்” என்றார். உடனே பெரியவா, ரொம்ப நல்லதா போச்சு. நாளைக்கே நீ குடும்பத்தோட போய் இதை பண்ணிடு, நேரா திருப்பதிக்குப் போங்கோ. அங்க ஸ்ரீநிவாஸப் பெருமாளுக்கு ஒரு திருக்கல்யாண உற்சவம் பண்ணி பிரார்த்தனை பண்ணுங்கோ.

எல்லாம் நல்ல படியா நடக்கும். இதோ எதுத்தாப்ல தட்டுகள்லே கல்யாண சீர்வரிசை மாதிரி முந்திரி, திராட்சை, கல்கண்டு எல்லாத்தையும் எடுத்துண்டு போய் அகிலாண்டேஸ்வரிக்கு அர்ப்பணம் பண்ணு” என்று கூறியபடியே இடத்தை விட்டு எழுந்தார். பெரியவாளை நமஸ்காரம் செய்து, ஸ்வாமிகளைப் பார்த்து ஸ்வாமிநாதன் தயங்கியபடியே, “பெரியவா, என் பெண் லட்சுமியோட பதினேழாவது வயசுலேர்ந்து இங்கே வரேன். தேடி வரும் போதெல்லாம்… திருமலை ஸ்ரீநிவாஸப் பெருமாளுக்கு திருக்கல்யாணோற்சவம் பண்ணி வெச்சுருக்கேன். இதுவரைக்கும் எட்டு தடவை நடத்தி இருக்கோம் பெரியவா” என்று கூறியதுதான் தாமதம்…

“சரி ஸ்வாமிநாதா! அதனாலென்ன? இந்த ஸந்யாஸி சொல்றதுக்காக ஒம்பதாவது தடவையா நடத்தி வையேன்” என்று சிரித்தவாறே கூறிவிட்டு வேகமாக உள்ளே சென்றுவிட்டார்.
அடுத்த இரண்டு நாட்களில் ஆச்சார்யாள் ஆணையிட்டபடி திருவானைக்காவில் அபிஷேக ஆராதனைகளையும், தாடங்க தரிசனத்தையும் முடித்துக் கொண்டு நேராக திருமலை வந்து சேர்ந்தார்கள் ஸ்வாமிநாதனின் குடும்பத்தினர்.

அன்று ஸ்ரீநிவாஸ திருக்கல்யாண வைபவத்துக்கு ஏக கூட்டம். நிறைய பக்தர்கள் பணம் செலுத்தி இருந்தனர். நடுவில் ஓர் ஓரமாக அமர்ந்திருந்தார்கள் ஸ்வாமிநாதனின் குடும்பம். கல்யாண மந்திரங்கள் முழங்க, எம்பெருமான் ஸ்ரீநிவாஸனுக்கு திருக்கல்யாணத்தை விமரிசையாக நடத்தி வைத்துக் கொண்டிருந்தனர் வைகானஸ பட்டர்கள். அப்போது ஸ்வாமிநாதன் தன் மனதுக்குள் இவ்வாறு ஏக்கப்பட்டார்.

‘`அப்பா ஸ்ரீநிவாஸா, இது தர்ம நியாயமா? நீ மாத்திரம் நித்தியம் கோலாகலமா இப்டி கல்யாணம் பண்ணிக்கறயே! எம் பெண் லட்சுமி என்ன பாவம் செஞ்சா? அவளுக்கு ஏன் ஒரு வரன் பாத்து கல்யாணம் பண்ணி வெக்க மாட்டேங்கறே? சொல்லு…’’ என்று வினவ, இதைப் பார்த்துவிட்டு அவரது மனைவியும், மகளும் அழ ஆரம்பித்தனர். ஸ்வாமிநாதனுக்கு பக்கத்தில் ஒரு குடும்பம் அமர்ந்திருந்தது. குடும்பத் தலைவருக்கு ஐம்பத்தைந்து வயதிருக்கும்.

ஸ்வாமிநாதனின் முதுகை பரம ஆதரவுடன் தடவிக் கொடுத்த அவர், “சார், எம் பேரு மஹாதேவன். மெட்ராஸ். நானும் ரொம்ப நாழியா பாத்துண்டு வரேன். சந்தோஷத்தோடு தரிசனம் பண்ண வேண்டிய இந்த தருணத்துல இப்படி நீங்க மூணு பேரும் அழுதுண்டிருக்கேளே… இது பார்க்கவே கஷ்டமாயிருக்கு” என்று சன்னமான குரலில் நாசூக்காகச் சொன்னார். இப்படி ஒருவர் ஆதரவோடு பேசியதும், நெகிழ்ந்துவிட்டார் ஸ்வாமிநாதன்.

உடனே, அந்த மஹாதேவனிடம் தன் கவலையை எல்லாம் சுருக்கமாகக் கொட்டித் தீர்த்துவிட்டார் ஸ்வாமிநாதன். லட்சுமியை திரும்பிப் பார்த்தார் மஹாதேவன். அவர் மனது சொல்லிற்று, ‘பெண் ரொம்ப லட்சணமா இருக்காளே’ மஹாதேவன் கேட்டார், “உங்க கோத்ரம்?”“காஸ்யப கோத்திரம்” இது ஸ்வாமிநாதனின் பதில்.

“நாங்க கௌண்டில்ய கோத்திரம். அது சரி! பொண்ணுக்கு வயசு…?” மஹாதேவன்.“இருபப்தி ஐந்து. ஏன் கேக்கறேள்?” என ஸ்வாமிநாதன் கவலையுடன் கேட்டார். உடனே மஹாதேவன்,
“திருக்கல்யாணம் முடியட்டும். அழச்சிண்டு போய் விவரமா பேசறேன்” என்றார். ஸ்ரீநிவாஸ கல்யாணம் பூர்த்தி அடைந்து, அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. தான் தங்கி இருந்த இடத்திற்கு ஸ்வாமிநாதன் குடும்பத்தை அழைத்துப் போனார் மஹாதேவன்.

அங்கே ஸ்வாமிநாதனிடம், “எனக்கு ஒரே பையன். வயசு இருவத்தாறு ஆறது. பேரு ஸ்ரீராம். நாங்கல்லாம் தஞ்சாவூர் ஜில்லா. இப்போ மெட்ராஸ். நான் மத்திய அரசாங்கத்தில் வேலை பண்றேன். பையன் கனடாவில் தனியார் கம்பெனிலே உயர்ந்த பதவியிலும் நல்ல சம்பளத்திலும் இருக்கான். அவன் நாளக்கி மெட்ராஸ் வரான். அவனுக்கு மூணு வருஷமா கல்யாணத்துக்குப் பொண் பாத்துண்டிருக்கேன். ஒண்ணுமே அமையலே. நாங்கல்லாம் காஞ்சி காமகோடி மடத்து பக்தாள். மூணு மாசத்துக்கு முன்னாடி ஒரு நாள் பெரியவாளை தரிசனம் பண்ணி, பையனுக்குக் கல்யாணம் தட்டிண்டே போற மனக் குறையை சொன்னேன்.

அவர்தான் திருமலைலே ஸ்ரீநிவாஸனை பிரார்த்திச்சுண்டு ஒரு கல்யாண உற்சவம் பண்ணிவை. உடனே ஆயிடும்னார். அது நடக்க இன்னிக்குத்தான் பிராப்தம் வந்தது. அந்த பெரியவா அனுக்ரகம் இருந்தா உங்க பொண்ணேகூட எங்க மாட்டுப் பெண்ணா வந்துடலாம்” என்று சொல்லி முடித்தார் மஹாதேவன். அந்த தருணத்திலேயே இருவரும் ஜாதகப் பரிவர்த்தனை செய்து கொண்டு, ஒரு பெரிய ஜோஸ்யரிடம் கொண்டு போய் ஜாதகங்களைக் காண்பித்தனர். ஜாதகத்தை பார்த்த ஜோஸ்யர், பொருத்தங்களும் தீர்க்கமாக அமைந்துள்ளதாகக் கூறினார். இரு குடும்பத்தாருக்கும் பரம சந்தோஷம். அன்றிரவே அனைவரும் சென்னை திரும்பினர். கனடாவிலிருந்து ஸ்ரீராம் வந்து சேர்ந்தான். அவனுக்கு லட்சுமியை பிடித்துவிட்டது. லட்சுமிக்கும் அவனை ரொம்பப் பிடித்துவிட்டது.

(மகிமை தொடரும்…)

ரமணி அண்ணா

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi