உறுதி தரும் விரதம்
நமது இந்திய சமய வழிபாட்டு முறை பல அற்புதங்களை உள்ளடக்கியது. அதில் சொல்லப்பட்ட விரதங்கள், பூஜைகள், ஒழுக்க விதிகள் போன்றவற்றை ஊன்றிக் கவனித்தால், அதன் நோக்கம் புரியும். மனிதனை உள்ளும் புறமும் தூய்மையாக்கி, உத்தமமான ஓர் உயர் வாழ்விற்கு தயார்படுத்தி, மனிதகுலத்தின் மாண்புக்கு உதவும் செயலைச் சத்தமில்லாமல் செய்கின்றன நமது இந்திய சமயங்கள். அதில் ஒரு அற்புதமான விரதம்தான் ஐயப்ப சுவாமி விரதம். சபரிமலை ஐயப்ப சுவாமி வழிபாடும், அதற்கான சாஸ்திர விதிகளும், சடங்குகளும், மாலை அணிந்து பூஜை செய்தலும், மனதையும் உடலையும் உறுதியாக்கும். மகத்தான வாழ்வை மலர்ச்சி செய்யும்.
விரதத்தின் நோக்கம் இதுதான்
பூஜைகள், விரதங்கள், வழிபாடுகள், நோக்க மென்ன தெரியுமா? மனித குலத்தை ஒன்று படுத்துவது (UNITY). ஆன்மிக உணர்வு பெற்று வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றிக் கொள்ளும் அமைப்பைத் தருவது. உடலையும் உள்ளத்தையும் உறுதியாக்குவது. உயர்நெறியை மனதில் செலுத்தி மனதை பண்படுத்துவது. பண்பட்ட நிலத்தில் விதைகள் முளைத்து செழிப்பாகும்.
ஐயப்ப விரதத்தால் மனதில் ஆன்மிகம் எனும் விருட்சம் வளர்ந்து வாழ்வு உன்னதமாகும். மண்டல விரதம் என மிக நீண்ட விரதம் ஐயப்ப விரதம். இந்த விரதம் கடுமையானது. வருடம் ஒருமுறை இப்படி விரதம் இருந்து பழகியவர்க்கு, வருடத்தின் மற்ற நாட்களில் மனத்துன்பமோ உடல் துன்பமோ வருவதில்லை. வந்தாலும் அதனை உறுதியாக எதிர்கொள்ளும் திறனும் குணமும் இயல்பாகவே மலர்ந்துவிடுகிறது.
அறத்தை நிலைநாட்டும் விரதம்
ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் சுவாமிதான். அவர்கள் பெயர் சொல்லி அழைத்துக் கொள்வதில்லை. அனைத்து வேறுபாடுகளையும் ஐயப்பசாமி விரதம் களைந்து அனைவரையும் ஒன்றுபடுத்துகின்ற அதிசயத்தைச் செய்கிறது. மாலை அணிந்து மண்டல விரதம் இருந்து, விரதத்தைக் கடைபிடிக்கும் ஒவ்வொருவருமே ஐயப்பனின் வடிவங்கள்தான். விரதத்தின் கடுமையால் மனம் தூய்மை அடைகிறது. பேசும் மொழிகள் தூய்மை பெறுகின்றன. உயர்ந்த வார்த்தைகளையே பேச வேண்டும் என்பது விரதத்தினுடைய நெறி.
மாலை அணிந்து விட்டால் உண்ணுகின்ற உணவும், பேசுகின்ற பேச்சும் உயர்தரமாகவே இருக்க வேண்டும். ஒரு ஒழுங்கு முறையோடு திகழ வேண்டும். அதுதான் ஐயப்பசுவாமி விரதத்தின் அடிப்படை. நாடு, மொழி, செல்வநிலை, வயது, பதவி, பட்டம் என அனைத்தும் ஐயப்பனுக்கு முன் சமநிலை பெற வேண்டும். பக்தர்கள் அனைவரும் அறத்தோடு வாழ வேண்டும் என்கின்ற தத்துவத்தை நிலைநாட்டுவது ஐயப்ப விரதம்.
பூரணத்திலிருந்து பூரணம்
சுவாமி ஐயப்பனின் அவதாரத்தில் இன்னுமொரு சிறப்பையும் கவனிக்க வேண்டும். ஒரே தெய்வத்தின் முப்பெரும் சக்திகள்தான் ஹரியும் ஹரனும் சக்தியும். பார்வதியை தங்கையாக்கி, பகவான் விஷ்ணுவை அண்ணனாக்கி, சிவபெருமானை தங்கை பார்வதியை மணந்த உறவாக்கி, தெய்வங்களிடம் பேதங்களை நீக்கி அபேதத்தைக் காட்டியது நமது தர்மம்.
ஆனால் இந்த அபேதங்களின் இணைப்பாக ஒரு உன்னத வடிவம் கிடைக்க வேண்டுமே, அப்படி சிவ விஷ்ணு ஐக்கியத்தில் அமைந்த அவதாரம்தான் ஐயப்பனின் அவதாரம். சிவனுக்கு முருகன், பிள்ளையார் என்று பிள்ளைகள் உண்டு. பகவான் விஷ்ணுவுக்கும் பிள்ளைகள் உண்டு. ஆனால் பகவான் விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் பிள்ளையாக சபரிமலை ஐயப்பனைச் சொல்லி, இரு சமயங்களின் இணைப்பைச் சொல்வதையும் கவனிக்க வேண்டும். பூரணத்திலிருந்து பூரணம் வந்தால் பூர்ணம்தான் என்பார்கள். அதேபோல, வந்த பூரணம்தான் சுவாமி ஐயப்பன்.
அம்பாளும், ஐயப்பனும்
ஐயப்ப சுவாமியின் அவதாரம், அம்பாள் பார்வதிதேவி எடுத்த அவதாரத்தின் தொடர்ச்சியாகவே இருக்கிறது. மகிஷாசுரன் ஆண். அந்த அசுரனை அழிக்க அன்னை பார்வதிதேவி சாமுண்டீஸ்வரியாக தோன்றி அழித்தாள். மகிஷாசுரனின் தங்கை மகிஷி, பெண். அவளை அழிக்க ஐயப்பசுவாமி ஆண்குழந்தையாகத் தோன்றினார். எந்த சக்தியும் மீசுரமாக மாறும் பொழுது, எதிர்சக்திகள் (Reaction) அதற்கேற்றவாறு தோன்றுகின்றன. பயிர்கள் இருக்கும் வரை களைகளும் இருக்கவே செய்யும். பரம விவசாயியான பரமன், அவ்வப்பொழுது களைகளை அகற்றி பயிர்களை காக்கிறான். இதுவே ஒவ்வொரு அவதாரத்தின் விசேஷமாகும்.
குழந்தைத் தெய்வங்கள்
பொதுவாக ‘‘குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்” என்று சொல்வார்கள். கண்ணனுக்கு ஒரு கிருஷ்ணஜெயந்தி, விநாயகருக்கு ஒரு விநாயகர் சதுர்த்தி முருகனுக்கு பங்குனி உத்திரம், கந்தசஷ்டி முதலிய விழாக்கள் வரிசையில் குழந்தை தெய்வமான மணிகண்டனுக்கு ஏற்பட்ட ஒரு அற்புதமான விழாதான் கார்த்திகை விரத விழா. இனி மணிகண்டனின் திருஅவதாரம் எப்படி நிகழ்ந்தது என்று பார்ப்போம்.
ஐயப்பனின் கதை
எளிமையான கதை. பாண்டிய வம்சத்தில் வந்த அரசன் ராஜசேகரன். பந்தள நாட்டை ஆண்டு வந்தான். அவனுடைய மனைவியின் பெயர் கோப்பெருந்தேவி. சிவனையும் விஷ்ணுவையும் அவர்கள் ஆராதனை செய்தனர். அவர்கள் இருவருக்கும் குழந்தை இல்லை. ஒரு நாள் பம்பை நதியோரம் அரசன் உலாவச் செல்லும் பொழுது ஓர் அழகான ஆண்குழந்தையைக் கண்டெடுத்தான்.
குழந்தையின் அழகும் தெய்வீகமும் வசீகரமும் கவர்ந்து இழுத்தது. பிள்ளையில்லாக் குறை தனக்குத் தீர்ந்துபோனதாக பெருமகிழ்ச்சி கொண்டான். குழந்தையின் கழுத்தில் மணி இருந்ததால் மணிகண்டன் என்ற பெயரை வைத்தான். குழந்தையின் மீது அரசனும் அரசியும் பாசத்தைப் பொழிந்தார்கள். மணிகண்டன் வந்த நேரமோ என்னவோ கோப்பெருந்தேவி கருவுற்றாள். ஒரு அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.
ராஜராஜன் என்று பெயர் வைத்தார்கள். இரண்டு குழந்தைகளுமே வளர்ந்தார்கள். ஆனால் நாள் செல்லச் செல்ல அரசிக்கு தானே தன் வயிற்றில் சுமந்து பெற்றெடுத்த குழந்தையின் மீது பாசம் அதிகரித்தது.
அரசியல் சூழ்ச்சி
குழந்தை மணிகண்டனுக்கு பன்னிரண்டு வயது ஆனபோது, அவதார காரியத்தின் நேரம் வந்தது. அதற்கான நாடகங்கள் மெல்ல நடந்தேறின. அரசிக்கு தீர்க்க முடியாத தலைவலி வந்தது. எந்த வைத்தியத்திலும் அந்த நோய் தீரவில்லை. மூத்த மகன் மணிகண்டனுக்கு முடிசூட்டிவிட அரசன் ராஜசேகரன் நினைத்தான். இந்தச் சந்தர்ப்பத்தை பந்தள நாட்டின் அமைச்சர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த நினைத்தனர். கூனி எனும் மந்தரையின் சூழ்ச்சி இல்லாவிட்டால் கைகேயியின் மனம் திரிய வாய்ப்பில்லை. கைகேயியின் மனம் திரியாவிட்டால் ராமன் காட்டுக்குப் போக வேண்டிய அவசியமில்லை. ராமன் காட்டுக்கு போகா விட்டால் ராவண வதமும் தேவர்களின் குறையும் தீர்வதற்கு வழியில்லை. எனவே அயோத்தியில் ஒரு தெய்வ சூழ்ச்சி நடந்தது. அப்படித்தான் ஒரு சூழ்ச்சி பந்தள நாட்டிலும் நடந்தது.
புலிப்பால் கொண்டுவரப் புறப்பட்டான் மணிகண்டன்
அலகிலா விளையாட்டில் நாமும் ஒரு அலகு தானே. (Part of Divine Play). மகிஷியை அழித்து தேவர்களைக் காக்க வந்த அவதாரம் அல்லவா சுவாமி ஐயப்பன். அவன் காட்டிற்கு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. அரசியல் சூழ்ச்சிகளும் அதற்கேற்றவாறு அரங்கேற்றம் செய்தன. அரசியின் நோய் தீர்க்க புலிப்பால் கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என்று சில மருத்துவர்களை கையில் வைத்துக்கொண்டு வினோதமான வைத்தியம் சொல்லி மந்திரிகள் சூழ்ச்சிசெய்தனர்.
தாயின் நோயைத் தீர்க்க தானே சென்று புலிப்பால் கொண்டுவருவதாக 12 வயது பாலகன் மணிகண்டன் புறப்பட்டான். நடக்க முடியாத செயல்கள் நடந்தன. மகிஷியின் வதம் நடந்தது. தேவர்களின் குறையும் தீர்ந்தது. புலிப்பால் மட்டுமல்ல, திரும்பவும் மருந்து கேட்டால் என்ன செய்வது என்று புலிமீது ஏறியே மணிகண்டன் வந்தான். மகிஷாசுரமர்த்தினியாக அம்பாள் சிங்கத்தின்மீது ஆரோகணித்து வந்தது போல, மகிஷியை அழித்த மணிகண்டன் புலியின்மீது ஆரோகணித்து வந்தான். தெய்வமாய் நின்றான்.
ஐயப்பனின் திருநாமங்கள்
சுவாமி ஐயப்பனுக்கு பலப்பல பெயர்கள் உண்டு. சாஸ்தா, தர்மசாஸ்தா, மணிகண்டன், ஹரிஹரசுதன், பூதநாதன், பூலோகநாதன், எருமேலி வாசன் என்று ஏராளமான பெயர்கள் உண்டு. ஐயப்பன் வழிபாடு நூதன வழிபாடு அல்ல. அது மிகப் பழமையான வழிபாடுதான். சாத்தன் என்கிற தெய்வ வழிபாடு (கிராம மக்களின் தெய்வம்) சாஸ்தா என்று மாறியது. அய்யனார்தான் ஐயப்பனாக மாறினார். இது ஆண்டாண்டு காலமாக எளிய மக்களால் நிகழ்த்தப்பெறும் குலதெய்வ வழிபாட்டின் பரிணாம வளர்ச்சிதான் என்றொரு கருத்தும் உண்டு. ஒவ்வொரு சமய மரபையும் பின்பற்றும் மக்களை இழுத்து ஒன்றாக்கும் ஓர் உன்னதமான வழிபாடாக மாற்றமடைந்து திகழ்வது இதன் சிறப்பு.
கார்த்திகை விரதம்
கார்த்திகை மாதம் என்பது ஒளி மாதம் என்பார்கள். ஐப்பசி மாதத்தில் துலா ராசியில் ஒளியிழந்த சூரியன், மீண்டும் பலம் பெற்று எழும் விருச்சிக மாதம் தான் கார்த்திகை மாதம். கார்த்திகை தீபம் கொண்டாடப்படும் இந்த மாதத்தில்தான் சிவபெருமான் ஜோதியாக எழுந்தார். எனவே இந்த மாதத்தின் முதல் நாளில் சபரிமலை விரதத்தை தொடங்க வேண்டும். அன்று முதல் 41 நாட்கள் ‘‘மண்டல விரதம்” இருக்கவேண்டும்.
ஒவ்வொரு நாளும் அருகில் ஓடும் நதியிலோ, புண்ணிய குளங்களிலோ, தூய்மையான குளிர்ந்த நீரிலோ நீராட வேண்டும். (வெந்நீரில் நீராடக்கூடாது) ஒவ்வொரு நாளும் தவறாது கோயில்களுக்குச் செல்ல வேண்டும். மாலையில் தீபம் ஏற்ற வேண்டும். சபரிமலைக்குப் போய் வந்து மாலையை கழற்றிவிட்டாலும் கூட, மகரஜோதி நாள் (தை முதல் தேதி) வரைக்கும் விரதத்தைத் தொடர வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு
ஐயப்ப சுவாமியின் விரதத்தில் மிக முக்கியமான பகுதி இருமுடி கட்டுதல். தலைக்கு மேலே ஒரு துணிப்பையில், இரண்டு பகுதிகளாகப் பிரித்து சில பொருட்களைச் சுமந்து செல்லுதல்தான் இருமுடி கட்டிக் கொள்ளுதல் என்பது. ஒரு காலத்தில் நீண்ட காட்டுவழியே (பெருவழிப்பாதை 75 கி.மீ.) சபரி
மலையை தரிசிக்கச் செல்ல வேண்டும். வழியில் உணவும் பொருளும் கிடைக்காது. பூஜைப் பொருட்கள் கிடைக்காது. எனவே ஒரு துணிப்பையில் இரண்டு பகுதிகளாகப் பிரித்து ஒரு பகுதியில் ஐயப்பன் சந்நதிக்குக் தேவையான பூஜைப் பொருட்களையும், ஒரு பகுதியில் தங்களுக்கு வேண்டிய உணவு முதலிய அத்தியாவசிய பொருட்களையும் ஒன்றுக்கு ஒன்று கலக்காமல் கட்டிக் கொண்டு யாத்திரை செல்வார்கள்.
அதற்கு முன் யாத்ரா தானம் உண்டு. யாத்திரை புறப்பட்டுவிட்டால், எக்காரணத்தை முன்னிட்டும் ஐயப்பன் தரிசனம் கிடைக்கும் வரை, அந்த மூட்டையை கீழே வைப்பதோ யாத்திரையில் இருந்து திரும்ப வருவதோ கூடாது. இருமுடியில் வைக்க வேண்டிய பொருள்கள்: மலை நடை பகவதி மஞ்சமாதாவுக்காக மஞ்சள்பொடி, சந்தனம், குங்குமம், நெய்த் தேங்காய், பசுநெய், விடலைத் தேங்காய்கள், கற்பூரம், பச்சரிசி. இன்னொரு பகுதியில் சமையலுக்கு தேவையான பொருட்கள் மிகக் குறைந்த அளவு கட்டிக் கொண்டு செல்ல வேண்டும். நெய்த் தேங்காயை அபிஷேகத்திற்கும் விடலைத்தேங்காயைப் படி ஏறும் முன்பும், தரிசனம்செய்து வந்துவிட்ட பின்பும் சூரைத்தேங்காய் விடுவதற்கு வைத்துக்கொள்ள வேண்டும்.
சபரிமலை பூஜைகள்
சபரிமலையில் ஒவ்வொரு மாதமும் பூஜை உண்டு. ஆங்கில புதுவருட நாளுக்கு முன்தினம் மகரவிளக்கு பூஜை தொடங்கும். தைமாதம் ஒன்றாம் தேதி மகரவிளக்கு. ஒவ்வொரு மாதமும் நான்கு முதல் ஐந்து நாட்கள் மாத பூஜைகள் நடைபெறும். பங்குனி மாதத்தில் உத்திரத் திருவிழா தொடங்கும். கொடியேற்றம் நடந்து ஆராட்டு விழா நடைபெறும். சித்திரை மாத முக்கியமான விழா சித்திரை விஷு. வைகாசி மாதத்தில் வைகாசி மாத பூஜையும் பிரதிஷ்டை தின விழாவும் நடைபெறும். ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் மாத பூஜைகள் நடைபெறும்.
ஆவணி மாதத்தில் திருவோணம் பூஜை நடைபெறும். புரட்டாசி மாதம், ஐப்பசிமாத பூஜை நடந்து சித்திரை ஆட்டத் திருநாள் விழா இரண்டு நாள் நடைபெறும். மிக நீண்ட நாள் நடை திறந்து இருப்பது கார்த்திகை மாத மண்டல பூஜையின் போது தான். சாதாரணமாக சபரி மலை பூஜை நேரங்கள்: காலைநேரப் பூஜை. கோயில் நடை திறப்பு நிர்மால்யம் அபிஷேகம். காலை 3.00 மணி. உஷ பூஜை: காலை 7.30 மணி முதல் நடைபெறும். உச்சிக்கால பூஜை: மதியம் 12.30 மணி; அத்தாழ பூஜை: இரவு 9.30 மணி.
கன்னி பூஜை
சபரிமலை யாத்திரை செய்யும் பக்தர்களிடம் குருசாமியும் உண்டு. கன்னி சாமியும் உண்டு. சபரிமலை யாத்திரைக்கு செல்லும் புதிய சாமிகளை கன்னிசாமி என்பர். அவர்களுக்கு வழிகாட்டி நடத்திச் செல்லும் சாமிகளை குருசாமிகள் என்று மதிப்போடு சொல்லும் வழக்கம் உண்டு. முதல்முறையாக சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் கன்னி பூஜை என்னும் சடங்கு நடத்திச் செல்வார்கள். இதனை வெள்ளக்குடி, படுக்கை, ஆழிபூஜை என்று சொல்வார்கள். பொதுவாக கார்த்திகை மாதம் முதல்தேதியில் ஆரம்பித்து, இச்சடங்கு நல்ல நாள் பார்த்து நடத்தவேண்டும்.
வீட்டில்தான் இதனைச் செய்யவேண்டும். ஒரு தனிப் பகுதியை தூய்மையாக வைத்து அங்கே ஐயப்பன் படம் வைத்து, விநாயகர், மாளிகைபுரத்து அம்மன், கருப்பஸ்வாமி, கடுத்தை சுவாமி, ஆழிக்குரிய இடங்களை ஒதுக்கி விளக்கேற்ற வேண்டும். எல்லா தெய்வங்களுக்கும் அவல் பொரி, வெற்றிலைபாக்கு, சித்திரானங்களை வைத்து பூஜை செய்யவேண்டும். மிக முக்கியமாக பக்தர்களுக்கு அவசியம் அன்னதானம் செய்ய வேண்டும்.
குருசாமி
இந்த பூஜைகளை வழிநடத்தும் சுவாமிகளுக்கு குருசாமிகள் என்று பெயர். ஒருவர் 18 ஆண்டுகள் தொடர்ந்து சபரிமலைக்கு தடையின்றிச் சென்று வந்துவிட்டால் அவர் குருசாமி என்று அழைக்கப்படும் மரபு உண்டு. பலருக்கும் குருசாமியாக இருந்து, பல முக்கியஸ்தர்களையும், சபரிமலை யாத்திரைக்கு அழைத்துச் சென்று, வழிநடத்தி, ஐயப்பனின் மகாத்மியத்தை பரப்பியவர்களில் ஒருவர் நடிகர் நம்பியார். அவரிடம் ஒரு முறை குருசாமி யார்? கன்னிசாமி யார்? என்று கேட்டபொழுது அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்.
‘‘நாம் எல்லோருமே கன்னி சாமிகள்தான். எத்தனை முறை சபரி மலைக்குப் போய் வந்தாலும், நாம் கன்னிசாமிதான். நமக்கெல்லாம் ஒரே ஒரு குருசாமிதான் உண்டு. அந்த குருசாமிதான் “சுவாமி ஐயப்பன்” என்று சொன்னார். இருந்தாலும், பல காலம் சபரிமலைக்குச் சென்று வந்த அனுபவ மிக்கவர்களை தங்கள் குருசாமிகளாக கொள்ளும் வழக்கம் நடைமுறையில் உண்டு.
பம்பை நதி
ராமாயணத்தில் சரயூநதி எத்தனை முக்கியமோ, கிருஷ்ணாவதாரத்தில் யமுனா நதி எத்தனை முக்கியமோ சபரிமலை செல்பவர்களுக்கு அத்தனை முக்கியம் பம்பைநதி. சபரிமலை செல்வதற்கு இரண்டு பாதைகள் உண்டு. ஒன்று பெரும்பாதை என்ற எரிமேலியில் தொடங்கி பம்பைவரை அடர்ந்த காட்டின் இடையே கல்லும் முள்ளும் நிறைந்த நீண்டபாதை. அடுத்து கோட்டயம், செங்கனூர், எர்ணாகுளம், திருவல்லா, ஆலப்புழா, புனலூர் முதலிய இடங்களிலிருந்து பம்பை நதிக்கு வரும் எளிய பாதை. இரண்டு பாதையும் சந்திக்கும் இடம் பம்பை நதி. இந்தப் பகுதிக்கு மேலுள்ள மலைதான் சபரிமலை என்று சொல்வார்கள். இங்கிருந்து சபரிமலை ஏழு கிலோமீட்டர். இங்கே நீராடிவிட்டுத்தான் சபரிமலைக்குச் செல்லவேண்டும்.
பம்பா உற்சவம்
ராமாயணத்தில் ராமனுக்காக காத்திருந்த வேடர்குலத்தில் பிறந்த பெண்ணான சபரிதான் பம்பைநதியாக இருப்பதாகச் சொல்வர். இது மிகப் புனிதமான நதி. இங்கேயும் ஒரு திரிவேணி சங்கமம் உண்டு. கல்லாறு, கக்காட்டாறு என்ற இரண்டு நதிகள் பம்பையில் கலக்கும் இடத்தில் பிதுர் தர்ப்பணம் செய்வது சிறந்தது. இங்கு ஆஞ்சநேயர் கோயிலும், கணபதி, ராமர் சந்நதிகளும் உண்டு. ராமர் கொண்டாடிய நதி பின்னர் பல முனிவர்களாலும், தற்போது ஐயப்பன் பக்தர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
பம்பை பேருந்து நிலையத்துக்குப் பக்கத்தில் பம்பை ஆற்றின் கரையோரம் ஒரே கல்லில் இரண்டு பாதங்கள் இருக்கின்றன. அதை பக்தர்கள், ‘ஸ்ரீராம பாதம்’ என்று சொல்லி வழிபடுகிறார்கள். மகர விளக்கு பூஜைக்கு முன்னால் பம்பா உற்சவம் என்ற உற்சவம் இந்த நதியில் நடக்கும். விளக்கு உற்சவம் என்பார்கள். பெரிய இலைகளில் நெய்விளக்கு ஏற்றி ஜெகஜோதியாக ஆற்றில் மிதக்க விடப்படும்.
மகர விளக்கு
சபரி மலையின் மிக முக்கியமான ஒரு நிகழ்வு மகரஜோதி. மகரம் என்பது தை மாதத்தைக் குறிக்கும். உத்தராயண புண்ணிய காலம் என்பார்கள். உத்தராய ணத்தில் முதல் தேதியை மகர சங்கராந்தி என்பார்கள். அன்றைக்கு மாலை சபரி மலைக்கு நேர் எதிர்மலையான பொன்னம்பலமேடு, (கண்டமாலா முடுக்கு) என்ற இடத்தில் மூன்று முறை வானத்தில் பிரகாசமான ஜோதி தெரியும். அதனை மகரஜோதி தரிசனம் என்று சொல்லுகின்றார்கள். இது குறித்து பல கருத்துக்கள் உண்டு என்றாலும்கூட, ஐயப்ப பக்தர்களால் அது ஒரு அதிசய நிகழ்வாகவே கருதப்படுகிறது.
இரண்டாவதாக சபரிமலை கார்த்திகை மண்டல பூஜைவிரதத்தின் நிறைவு நிகழ்ச்சியாக மகரவிளக்கு நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது. சூரியன், தனுசு ராசியில் இருந்து மகர ராசியில் பிரவேசிக்கும் முகூர்த்தத்தில் நடைபெறும் இந்த மகரஜோதி பூஜையில் திருவனந்தபுரம் கவடியார் அரண்மனையில் இருந்து வரும் நெய்த் தேங்காய் உடைக்கப்பட்டு ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படும். பந்தளத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட திருவாபரணம் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும்.
பதினெட்டாம் படி தத்துவம்
சபரிமலை என்றாலே பதினெட்டாம்படி நினைவுக்கு வந்துவிடும். பதினெட்டாம் படியேறி தரிசனம் செய்வதுதான் முறையான தரிசனம். ஆனால், அந்த 18 படிகளை ஏற வேண்டும் என்று சொன்னால், முறையான மண்டல பூஜையும் விரதமும் இருக்க வேண்டும். விரதமும் பூஜையும் முறையாக இல்லாதவர்கள் எத்தனை உயர்ந்த பதவியில் இருந்தாலும் பதினெட்டாம் படி ஏறி தரிசனம் செய்யமுடியாது. இந்திய சமயநெறிகளில் பதினெட்டு என்கின்ற எண் மிக உயர்வானது. புராணங்கள் பதினெட்டு. பகவத் கீதையின் அத்தியாயங்கள்
18. மகாபாரதப் போர் நடந்தது 18 நாட்கள். மகாபாரத பருவங்கள் 18. சித்தர்களின் எண்ணிக்கை 18. தமிழில் கீழ்க்கணக்கு நூல்கள் 18. பதினெட்டுப் படி ஏறிவரும் பக்தர்கள் ஐந்து கர்மேந்திரியங்களையும், ஐந்து ஞானேந்திரியங்களையும், அன்னமயகோசம் முதலான ஐந்து கோசங்களையும், சத்வ, ரஜோ, தமோ குணங்கள் ஆகிய மூன்று குணங்களையும் கடந்து உள்ளுறையும் ஆத்மனையே ஐயப்பனாகத் தரிசிக்கிறார்கள்.
மஞ்சமாதா எனப்படும்
மாளிகைபுரத்து அம்மன்
தெய்வ அவதாரங்கள் செய்யும் வதம் என்பது ஒரு சாபவிமோசனம்தான். தீய சக்தியில் இருந்து விடுபடும்பொழுது அவர்களுக்கும் ஒரு மதிப்பு வந்துவிடுகிறது. ஐயப்பனோடு ஆர்ப்பரித்து சண்டை செய்த மகிஷி என்னும் அரக்கி ஐயப்பனின் அம்புக்கு அடிபட்டு விழுந்த இடம் அழுதா நதி என்று சொல்வார்கள். அவள் தன்னுடைய அரக்கி வடிவத்திலிருந்து அழகிய பெண்ணாக மாறினாள். லீலா என்று அவளுக்குப் பெயர். தன் எதிரே நின்ற ஐயப்பனைப் பார்த்து, அவன் திருவடிகளில் விழுந்து வணங்கி, தன்னை மணந்துகொள்ள வேண்டும் என்று பிரார்த்தனை செய்தாள்.
ஆனால் ஐயப்பன், ‘‘தான் இந்த பிறவியில் பிரம்மச்சரிய விரதம் அனுஷ்டிப்பதால் மணந்துகொள்ள முடியாது” என்று சொல்கிறார். ஆனாலும் அவள் வற்புறுத்தவே, ‘‘இதோ பார், நீ எனக்காக காத்திரு. என்றைக்கு என் சந்நதிக்கு ஒரு கன்னிசாமியும் வராமல் இருக்கிறாரோ, அன்றைக்கு உன்னை மணந்து கொள்ளுகின்றேன்” என்று தன் கோயிலுக்கு அருகாமையிலேயே அவளுக்கும் ஒரு இடம் தந்தார்.
அங்கே மாளிகைபுரத்து அம்மன், மஞ்சள் மாதாவாக எழுந்தருளி ஐயப்பபக்தர்களுக்கு அருள் செய்கிறார். சபரிமலை ஐயப்பனை தரிசிப்பவர்கள் மாளிகைபுரத்து அம்மனை தரிசிக்காமல் திரும்புவதில்லை. அப்பொழுதுதான் சபரிமலை யாத்திரை நிறைவுபெறும். மாலை அணியும்போது மஞ்சமாதாவின் பெயரையும் சொல்லி மாலை அணிவார்கள். மஞ்சமாதாவுக்கு என்று தனியாக மஞ்சள் பொடியை இருமுடியில் வைத்துக் கொள்வார்கள்.
ஐயப்பனுக்கு செய்யப்படும் அபிஷேகம்
எப்படி இருக்க வேண்டும்? அதிலும் நெய் அபிஷேகத்தின் தன்மை என்ன? அபிஷேகத் தத்துவங்கள் என்ன? என்பதைக் கீழ்வரும் சரணங்களில் கவியரசு கண்ணதாசன் பாடி இருக்கிறார். இதைப் பாடும்போது சபரிமலையில் தொடர்ந்து நடக்கும் அபிஷேக ஆராதனைகள் நம் கண்களில்காட்சியாக விரியும்.
“பாலெனச் சொல்லுவது உடலாகும்
அதில்
தயிரெனக் கண்டதெங்கள் மனமாகும்
வெண்ணெய் திரண்டதுந்தன்
அருளாகும் இந்த
நெய் அபிஷேகம் எங்கள் அன்பாகும்
வாசமுடைய பன்னீர் அபிஷேகம்
எங்கள்
மனதில் எழுந்த அன்பால் அபிஷேகம்
அதில்
இனிய பஞ்சாமிர்தத்தின் அபிஷேகம்
இன்பத்தைக் கூட்டுதய்யா உன் தேகம்
உள்ளத்தின் வெண்மைதன்னைக்
கையிலெடுத்து அதில்
உன் பெயரைக் குழைத்து நெற்றியிலிட்டு
உருகும் விபூதியினால் அபிஷேகம்
ஹரி
ஓம் என்று சந்தனத்தில் அபிஷேகம்’’
சபரிமலை என்றாலே சரண கோஷம்தான். ‘‘சரணம் சரணம் ஐயப்பா, சுவாமி சரணம் ஐயப்பா..” என்று உள்ளமும் உடலும் உருகிப் பாடும் சரணகோஷத்தால் பஞ்சபூதங்களும் தூய்மை பெறுகின்றன. மனித குலத்தின் ஒழுக்கநெறி உயர்வதற்கு உத்தமமான விரதம் சபரிமலை கார்த்திகை மண்டல பூஜை விரதம். ஒவ்வொரு வருடமும் சபரிமலைக்கு மாலை போட்டுச் செல்லுபவர்கள் கூடிக் கொண்டே போகிறார்கள். சபரிநாதனின் அதிசயங்கள் பரவசமூட்டுபவை. பக்தியைப் பெருக்குபவை. நம்பிய பக்தர்களை ஐயப்பன் கைவிடுவதேயில்லை.
தொகுப்பு: ஜெயசெல்வி